சர்வதேச அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலில் 12-வது இடம் எதற்கு தெரியுமா?


உலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை 12-வது இடத்தில் உள்ளது. மும்பையில் வாழும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 95,000 கோடி டாலராகும்.

ஆய்வு நிறுவனமான நியூ வேர்ல்டு வெல்த் சர்வதேச அளவில் செல்வச் செழிப்பு மிக்க 15 நகரங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.

நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனத்தின் 15 பணக்கார நகரங்கள் பட்டியலில் நியூயார்க் 3 லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.


லண்டன் இரண்டாவது இடத்திலும் (2.7 லட்சம் கோடி டாலர்), டோக்கியோ (2.5 லட்சம் கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சான் பிரான்சிஸ்கோ (2.3 லட்சம் கோடி டாலர்), பீஜிங் (2.2 லட்சம் கோடி டாலர்), ஷாங்காய் (2 லட்சம் கோடி டாலர்) முறையே 4, 5 மற்றும் 6-வது இடங்களில் இருக்கின்றன.

அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் (1.4 லட்சம் கோடி டாலர்), ஹாங்காங் (1.3 லட்சம் கோடி டாலர்), சிட்னி (1 லட்சம் கோடி டாலர்), சிங்கப்பூர் (1 லட்சம் கோடி டாலர்), சிகாகோ (98,800 கோடி டாலர்) ஆகிய நகரங்கள் உள்ளன.

மேற்கண்ட 15 நகரங்களில் சான் பிரான்சிஸ்கோ, பீஜிங், ஷாங்காய், மும்பை மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் தனிநபர்களின் சொத்து மதிப்பு வளர்ச்சி வேகத்தின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னிலையில் உள்ளதாக நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வறிக்கை கூறுகிறது.


மிக குறைந்த வித்தியாசத்துடன் ஹூஸ்டன், ஜெனிவா, ஒசாகா, சியோல், ஷென்ஜென், மெல்போர்ன், ஜூரிச் மற்றும் டல்லாஸ் ஆகிய நகரங்கள் 15 பணக்கார நகரங்கள் பட்டியலில் இடம் பிடிக்கத் தவறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் வாழும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 95,000 கோடி டாலராகும். இதன்படி இந்நகரம் 12-வது இடத்தில் உள்ளது.

அடுத்து டாரன்ட்டோ, 94,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 13-வது இடத்திலும், பிராங்க்பர்ட் 91,200 கோடி டாலருடன் 14-வது இடத்திலும் இருக்கின்றன.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் 15-வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள தனிநபர்களின் மொத்த சொத்து மதிப்பு 86,000 கோடி டாலராகும். – Source : dailythanthi.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!