காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி… 3 வாலிபர்கள் செய்த கொடூரம்!

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை 3 வாலிபர்கள் விஷம் கொடுத்து கொன்றதாக கூறப்படும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

திருச்சி மாவட்டம் நொச்சி வயல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 52). இவரது மனைவி சாந்தி (48). இந்த தம்பதியின் மகள் வித்யாலட்சுமி (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக வித்யா லட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது வயிற்றில் விஷம் கலந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பாய்லர் ஆலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து வித்யாலட்சுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது மாணவி கூறியதாவது:- கடந்த 11-ந் தேதி நான் கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது, 3 பேர் என்னை வழிமறித்தனர். துவாக்குடியை சேர்ந்த ஒருவரின் 18 வயது மகன் என்னை காதலிப்பதாக கூறினான். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவனை செருப்பால் அடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி நான் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தேன்.

அப்போது, அந்த 3 பேரும் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு அருகில் உள்ள சந்துக்குள் சென்றனர். பின்னர் விஷம் கலந்த குளிர்பானத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். இதில் இருந்துதான் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் போலீசிடம் தெரிவித்தார். இதற்கிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வித்யாலட்சுமி நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் தனது மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடு்ம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியின் தந்தை ஆனந்தன், தாய் சாந்தி மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் நொச்சிவயல்புதூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துவாக்குடி மற்றும் அதிரடிபடை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக சொன்னார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தினர். இதில் சிலர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் போலீசார் மாணவி அளித்த வாக்குமூலம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:- இந்த வழக்கில் மாணவி வித்யா லட்சுமி விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தின் பகுதியில் உள்ள செல்போன் டவர்கள் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் மாணவி சிகிச்சைக்கு சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் மாணவி தற்கொலைக்குதான் தூண்டப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். கைதான அந்த மாணவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!