உடலுக்கு பழுத்த பழங்கள் நல்லதா..? பழுக்காத பழங்கள் நல்லதா..?

பழுக்காத பழங்கள் மற்றும் பழுத்த பழங்கள் இவை இரண்டும் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்றாலும் அவற்றுள் எது சிறந்த ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்வது நல்லது.

சில பழுக்காத பழங்கள் பழுத்த பழங்களை விட சிறந்த அளவு புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மேலும் அவற்றில் சர்க்கரை குறைந்த அளவு உள்ளது. எனவே அவை நீரிழிவு நோயாளிகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆரோக்கியமான தேர்வாக அமைகின்றன.

பழங்கள் நன்றாக பழுக்க ஆரம்பிக்கும்போது அதிலிருக்கும் மாவுச்சத்து (ஸ்டார்ச்) சர்க்கரையாக மாறும் செயல்முறை நடைபெறுகிறது. இந்த செயல்முறை ‘பினாலிக் காம்பவுண்ட்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. பழங்கள் மென்மையாகவும், ஜூஸ் பதத்திற்கும் மாறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பழங்களில் நீர் அதிகரித்தால், அவை சர்க்கரையாக மாறும். பழுக்காத பழங்களை விட பழுத்த பழங்களை சாப்பிட்டால் உடலில் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை சேரும்.

அதேவேளையில் வாயில் இருக்கும் என்சைம்களால் மாவு சத்தை எளிதில் ஜீரணமாக்க முடியாது. இதனால் அது குடலுக்குள் சென்றுவிடும். அங்கு நுண்ணுயிரிகளுடன் வினைபுரிந்து விடும். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், எளிதில் நொதிக்கப்படும் சர்க்கரை, உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது.

ஆன்டி ஆக்சிடன்ட்கள்: பழுக்காத பழங்களை விட பழுத்த பழங்களில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிரம்பி இருக்கும். மேலும் பழங்களை பழுக்க வைக்கும் போது ஆன்டி ஆக்சிடன்டுகள் மட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்கள் அதிகரிக்கும். ஏனென்றால், உடலில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டுகளுக்கு முக்கிய காரணமான அந்தோசயனின் படிப்படியாக உருவாகிறது. பழங்கள் பழுக்காத நிலையில் இருந்து நிறம் மாறி பழுத்த நிலையை அடையும் வரை பழுக்க வைக்கும் செயல்முறையின் நன்மைகள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. எனவேதான் பழுக்காத பழங்களை விட பழுத்த பழங்களில் அதிக ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பி இருக்கின்றன.

வைட்டமின்-சி: பழங்களில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் சி முதன்மையானது. இது ஆரோக்கியத்திற்கு பல விதங்களில் நன்மை சேர்க்கக்கூடியது. பழங்கள் பழுக்கும் செயல்முறையின்போது அதிலிருக்கும் வைட்டமின்கள் அதிகரிக்கவும், குறையவும் செய்யும். அது பழங்களின் தன்மையை பொறுத்தது. குடைமிளகாய், தக்காளி, அன்னாசி போன்ற பழங்கள் பழுத்தவுடன் வைட்டமின் சி அளவு அதிகரிக்கும். இருப்பினும் ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்கள் பாதி பழுத்தவுடனேயே அவற்றில் வைட்டமின் சி அதிகரித்துவிடும்.

இந்த வைட்டமின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். முக்கியமாக நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். வைட்டமின் சி உள்ளடங்கி இருக்கும் பழங்கள் உடலில் இரும்பு சத்தை உறிஞ்சும் திறனையும் அதிகரிக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!