கீவ் நகரை விட்டு நான் எங்கும் போக மாட்டேன் – உக்ரைன் அதிபர் உறுதி

ரஷியாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:

ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ரஷியா என்னை நம்பர் ஒன் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனது குடும்பம்தான் அவர்களின் இரண்டாவது இலக்கு. உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர்.

கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனால், நகர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்.

உக்ரைன் அரசு பணியாற்ற தேவையான அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுடன் ஒன்றாக நான் அரசு இல்லத்தில் தங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

நேற்றைய தாக்குதலில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது.

இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளதாக் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

மேலும், ரஷியாவுக்கு எதிராக முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்கும்படி ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும்.

ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும். இதற்கான நிதியை ஒதுக்கும்படி உக்ரைன் அமைச்சரவையை அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!