குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்!

நாமக்கல் பெண்ணுக்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த சாதனா (31), விக்னேஷ் தம்பதியினருக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சேலத்தில் உள்ள, தனியார் ஆஸ்பத்திரியல் ஆபரேசன் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குறைப்பிரசவத்தில் மிகவும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளை அதே ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

ஒரு மாதம் சிகிச்சை அளித்தும் குழந்தைகளில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சைக்காக, பல லட்சம் ரூபாய் செலவனதால் பெற்றோர்கள் கவலையடைந்தனர். எனவே குழந்தைகளை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஓரிரு நாட்களில், இரட்டைக் குழந்தைகளில் முதல் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. அந்தக் குழந்தையின் எடை 720 கிராம் மட்டுமே இருந்தது. இதனால் பெற்றோர்கள் மட்டுமின்றி டாக்டர்களும் மனவேதனை அடைந்தனர். உயிருடன் இருந்த 525 கிராம் மட்டுமே எடை இருந்த, மற்றொரு குழந்தையை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற சவாலுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி மற்றும் துணைத்தலைவர்களின் ஆலோசனையுடன் தொடர்ந்து 80 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பலனாக குழந்தையின் உடல்நிலை சீரடைந்து, 525 கிராம் எடையுடன் இருந்த அந்த குழந்தை தற்போது 1. 3 கிலோ அளவிற்கு எடை உயர்ந்து ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் பெற்றோர்களும், டாக்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!