காப்பாற்றி அழைத்து செல்லுங்கள் – உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவிகள்!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் எங்கள் மகள் மற்றும் மற்ற மாணவிகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷியா- உக்ரைன் இடையே நேற்று போர் தொடங்கியது. இதனால் உக்ரைன் தலைநகரில் ரஷியா குண்டு வீசியது. இதில் பலர் பலியானார்கள்.

கோவை, நீலகிரியை சேர்ந்த மாணவிகள் உக்ரைனில் தங்கி மருத்துவம் படித்து வருகிறார்கள்.

தற்போது நிலவி வரும் போர் காரணமாக இவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தங்களை இங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து செல்ல வேண்டும் என அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைன் வின்னிஸ்டியா மாவட்டத்தில் உள்ள பிரோகோவ் பல்கலைக்கழகத்தில் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த மதன்மோகன் என்பவரின் மகள் ரஞ்சனி(22) என்பவர் 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது உக்ரைனில் நிலவும் போர் குறித்து அவர் கூறியதாவது:-

கொரோனாவால் அறைகளில் தங்கி ஆன்லைன் மூலம் பயின்று வருகிறோம். ரஷியா குண்டு வீசிய உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து நாங்கள் வசிக்கும் பகுதி 300 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த சத்தம் எங்கள் பகுதியிலும் கேட்டது.

மேலும் நாங்கள் தங்கியிருக்க கூடிய பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே குண்டுகள் கிடந்ததாகவும் தகவல்கள் வந்தன. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதால் உயிரை கையில் பிடித்தபடி அச்ச நிலையிலேயே உள்ளோம். எங்களுடன் இந்திய தூதரகம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகமும் தொடர்பில் உள்ளது. எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. நாங்களும் தயார் நிலையில் உள்ளோம்.

மார்ச் 8-ந் தேதி இந்தியாவிற்கு வர டிக்கெட் எடுத்திருந்தோம். ஆனால் ரஷியா போர் தொடுத்ததால் விமானங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் உடனடியாக தாயகம் திரும்ப முடியவில்லை. எனவே இந்திய அரசு விரைவாக விமான வசதி செய்து கொடுக்க வேண்டும்.

எங்கள் பல்கலைக்கழகத்தில் என்னுடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த 40 பேர் படித்து வருகிறோம். மொத்தம் 181 பேர் எங்கள் பகுதியில் இருப்பதாக விண்ணப்பத்தில் தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கருமத்தம்பட்டியை சேர்ந்த பொன்னுக்குட்டி, தமிழ்செல்வி தம்பதியிரின் மகள் பார்கவியும்(22) உக்ரைனில் தவித்து வருகிறார். அவர் மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் செயல்பட்டுவரும் டேனிலோ ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் கூறுகையில், நாங்கள் எங்கள் மகளை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இங்கு போர் பதற்றம் இல்லை என்றும் எங்களுக்கு தைரியம் கொடுத்தார். இதேபோல் எனது மகளுடன் நாமக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் தவித்து வருகின்றனர். அவர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளனர். எனவே உக்ரைனில் சிக்கி தவிக்கும் எங்கள் மகள் மற்றும் மற்ற மாணவிகளையும் மீட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி சாய்பிரியா(22) என்பவரும் உக்ரைனில் சிக்கி தவித்து வருகிறார்.

உக்ரைன் மேற்கு பகுதியில் செயல்படும், உஷ்கோத் நே‌ஷனல் மெடிக்கல் இன்ஸ்டியூட் மருத்துவ கல்லூரியில் 2019-ல் பொது மருத்துவத்துறையில் படிக்க சென்றார். இவரது தந்தை சத்திய மூர்த்தி கூறுகையில், எனது மகளிடம் போனில் பேசினோம். பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்தார். 2 முறை இந்தியா வருவதற்கு விமான டிக்கெட் பதிவு செய்தும் அது ரத்து ஆனது. 3-வது முறையாக 27-ந் தேதி வருவதற்காக டிக்கெட் எடுத்துள்ளோம் என்றார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!