நீண்ட நேரம் வேலை செய்பவரா நீங்கள்..? அப்ப இது உங்களுக்கு தான்..!

எதிர்பாராதவிதமாக துயரத்தை அனுபவிக்க நேரிடும்போது மனம் வேதனைக்குள்ளாகிவிடும். ஆனால் அது நீண்டகால சோகமாக பின் தொடர்ந்தால் உடல் நலனையும், மன நலனையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.


நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகக்கூடும். அவர்களிடம் சோகமும் குடிகொள்ளும். எப்போதாவது இதுபோன்ற நிலைமையை எதிர்கொண்டால் பரவாயில்லை. அடிக்கடி நடந்தால் அது கவலைக்குரிய விஷயம். எப்போதும் ஒருவரால் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க முடியாது. இன்பமும், துன்பமும் வாழ்வில் இரண்டற கலந்தது. எதிர்பாராதவிதமாக துயரத்தை அனுபவிக்க நேரிடும்போது மனம் வேதனைக்குள்ளாகிவிடும். ஆனால் அது நீண்டகால சோகமாக பின் தொடர்ந்தால் உடல் நலனையும், மன நலனையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். அதுபோலவே நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள்:

சோகம்: அடிக்கடி சோகமாக இருப்பதாக உணர்ந்தால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். வேலையினால் ஏற்படும் மன அழுத்தம், தனிப்பட்ட பிரச்சினைகள், பணி இடத்தில் ஊக்கமின்மை, தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் அதற்கு காரணமாக இருக்கலாம். அவற்றை சரி செய்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இடைவெளி: வேலைக்கு இடையே சிறிது நேரம் ஓய்வு எடுப்பது, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது சிக்கலான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு உதவும். குறிப்பாக விடுமுறை நாட்களில் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்க முன் வர வேண்டும். அந்த சமயத்தில் வேலை பற்றிய சிந்தனைக்கு இடம் கொடுக்கக்கூடாது. வேலையை தவிர்த்து மனதுக்கு பிடித்தமான விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டும். சமையல், நடனம், பயணம் என ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிட வேண்டும். அப்படி செய்து வந்தால் மீண்டும் வேலைக்கு திரும்பும்போது புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

கனவு: சோகத்தில் இருந்து மீள்வதற்கு சிறந்த வழி உற்சாகத்துடன் செயல்படுவதுதான். கனவுகள், இலக்குகளை எட்டிப்பிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். செய்யும் வேலையை நேசிக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும். சிலர் செய்யும் வேலையை நேசிப்ப தில்லை. அது மன அமைதியையும், மகிழ்ச்சியையும் பறிகொடுக்க காரணமாகிவிடுகிறது. அடிக்கடி மனசோர்வுக்கு ஆளானால் அதில் இருந்து மீள்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

சாதனை: வேலையில் ஏதேனும் எதிர்பாராத தவறு நடந்து மன உளைச்சலுக்கு ஆளானால் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டு சாதித்த தருணங்களை பற்றி சிந்தியுங்கள். அது இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற உதவும். நல்ல விஷயங்களை பற்றி சிந்திப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். மன நிலையையும் மேம்படுத்த உதவும். தோல்வி அடைந்தால் துவண்டு போகாதீர்கள். தோல்வியும், கஷ்டங்களும் வாழ்வியலுடன் இணைந்தவை. தோல்வியில் இருந்து ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள முயலுங்கள். அது அடுத்த முறை சிறப்பாக செயலாற்ற வழிகாட்டும்.

இலக்கு: ஏதாவதொரு இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி பயணிக்க வேண்டும். மனசோர்வுக்கு ஆளாகும்போதெல்லாம் இலக்கு பற்றி சிந்தித்து அதிலிருந்து மீள்வதற்கு முயல வேண்டும். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். சிறந்த ஆலோசனைகள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வர துணைபுரியும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!