ஆப்பிளின் புதிய அதிரடி முடிவு?


ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனையை நிறுத்த ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதி்ர்பார்க்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக அறிமுகமான ஐபோன் X-இல் மற்ற ஸ்மார்ட்போன்களில் இல்லாத அதிகப்படியான புது அம்சங்கள் வழங்கப்பட்டிருந்தன.

உலகம் முழுக்க ஐபோன்களுக்கென வழக்கமான சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் விற்பனையும் குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X ஸ்மார்ட்போன்களின் விற்பனையை இந்த ஆண்டுடன் நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி 2018 ஃபிளாக்ஷிப் ஐபோன்கள் வெளியீட்டை தொடர்ந்து முதல் தலைமுறை ஐபோன் X விற்பனை நிறுத்தப்படலாம் என மிங் சி கியோ தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 6.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஐபோன்களை வெளியிடலாம் என்றும் இதைத் தொடர்ந்து 5.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் X விற்பனை நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

2018-இல் வெளியாக இருக்கும் ஐபோன் வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் X விலை குறைக்கப்பட்டால், புதிய ஐபோன்களின் விற்பனை பாதிக்கலாம் என ஆப்பிள் கணித்திருப்பதாக கியோ தெரிவித்துள்ளார். மேலும் 2018 ஐபோன் மாடல்கள் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகாத நிலையில் மேம்படுத்தப்பட்ட ஐபோன் X மாடலில் 5.8 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் இதனுடன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் புதிய ஐபோன்களில் டச் ஐடி வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்த ஆண்டு புதிய ஐபோன்கள் வெளியாகும் போது ஐபோன் 7 குறைந்த விலையில் வாங்க சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் மேம்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்.இ. மாடல் ஒன்றை ஆப்பிள் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மிங் சி கியோ வெளியிட்டிருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், ஆப்பிள் வரலாற்றில், ஐபோன் வெளியான ஒரே ஆண்டில் விலை குறைப்பு செய்யாமல் விற்பனை நிறுத்தப்படும் முதல் ஐபோன் என்ற பெருமையை ஐபோன் X பெறும். ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் என்ற வகையில் ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை நிறுத்தப்படுமா என்பது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை.
– Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05