முழங்கை மூட்டு பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் வழிமுறைகள்!

இறந்த செல்கள் படிந்திருப்பது, மெலனின் சுரப்பு அதிகரிப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வு, மரபணு காரணிகள், உடல்பருமன் போன்றவையும் மூட்டு பகுதிகளின் கருமைக்கு காரணமாக இருக்கின்றன.


முழங்கை, கால்களின் மூட்டு பகுதிகளில் தோல் பல மடிப்புகளுடன் தடிமனாக இருக்கும். மற்ற பகுதிகளைவிட சருமம் வறண்டும், கடினமானதாகவும் காணப்படும். அந்த பகுதியில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைந்திருப்பதே அதற்கு காரணம். எண்ணெய் பசைத்தன்மையை தக்க வைத்துக்கொள்வது அவசியம். போதிய கவனம் செலுத்தாவிட்டால் மூட்டு பகுதி கருமையாக மாறிவிடும். இறந்த செல்கள் படிந்திருப்பது, மெலனின் சுரப்பு அதிகரிப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வு, மரபணு காரணிகள், உடல்பருமன் போன்றவையும் மூட்டு பகுதிகளின் கருமைக்கு காரணமாக இருக்கின்றன. மூட்டு பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் வழிமுறைகள்:

எலுமிச்சை அதிக ஆன்டிஆக்சிடென்டுகளை கொண்ட சிட்ரஸ் பழ வகையை சார்ந்தது. சருமத்தை பிரகாசிக்க செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும். சருமத்தில் உள்ள இருண்ட செல் அடுக்குகளை போக்கவும் உதவும். எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதனை மூட்டு பகுதியில் வைத்து அழுத்தி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு சாதாரண நீரில் மூட்டு பகுதியை கழுவிவிடலாம். உலர்ந்ததும் ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷனை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து மூட்டு பகுதியில் தடவி மசாஜ் செய்துவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.

சரும நோய்களை குணப்படுத்து வதற்கு தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் வைட்டமின் ஈ, சேதமடைந்த சருமத்துக்குள் ஊடுருவி விரைவாக குணமாகுவதற்கு துணைபுரியும். தேங்காய் எண்ணெய்யை மூட்டு பகுதியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் அதே அளவு எலுமிச்சை சாறை கலந்து கருப்பு படிந்திருக்கும் பகுதியில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். உலர்ந்ததும் சாதாரண நீரில் கழுவிவிடலாம்.

தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலமும் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும் தன்மை கொண்டது. சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுவதால் சரும பராமரிப்பு மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனை கருமை படிந்த மூட்டுவுக்கும் உபயோகிக்கலாம். தயிருடன் வினிகரை கலந்து நன்றாக குழைத்து மூட்டு பகுதியில் தடவிவிட்டு உலர்ந்ததும் நீரில் கழுவிவிடலாம். அதன் பிறகு ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷனை தடவிவிடலாம். தயிருடன் கடலை மாவை குழைத்தும் தடவி வரலாம்.

இறந்த செல் அடுக்குகளை நீக்கி புதிய செல் அடுக்குகளை உருவாக்குவதில் சர்க்கரைக்கும் பங்கு இருக்கிறது. சருமத்திற்கு வறட்சி ஏற்படாமல் ஈரப்பதத்தன்மையை தக்கவைப்பதற்கும் உதவுகிறது. சர்க்கரையுடன் சம அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து மூட்டு பகுதியில் தடவிட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். இறந்த செல் அடுக்குகளை மெதுவாக துடைத்து அகற்றவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மூட்டு பகுதியில் இருக்கும் கருமை மறைந்துவிடும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!