உடல் சூடு பிரச்சனையா..? சில பாட்டி வைத்திய குறிப்புகள் இதோ..!

கோடைகாலம் நெருங்கி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை உடல் உஷ்ணம். இதன் மூலம் நிறைய நோய்களும் உருவாகிறது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே உடல் உஷ்ணத்தை குறைப்பது அவசியமாகிறது. அதற்கான பாட்டி வைத்திய முறையில் சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு தண்ணீரை குடித்து வர உடல் உஷ்ணம் குறையும்.

இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும்.

கோடை காலத்தில் பலருக்கும் செரிமான பிரச்சனைகள் இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனாலும் கூட உடற் சூடு அதிகரிக்கும். எனவே திரிபலா லேகியம் போன்ற இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது நல்லது.

நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.

புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து குடித்து வர அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். நல்லெண்ணெய் இல்லாவிட்டாலும், தினமும் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு பயன்படுத்தும் நல்லெண்ணெயை காய்ச்சி மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வெந்நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மோரில் வைட்டமின்கள், கனிம சத்துகள் போன்றவை அதிகம் உள்ளது. இவை உடல் சூட்டை தணிக்க பயன்படும் என்பதால் மதிய உணவில் மோரை சேர்த்துக் கொள்வது அவசியம்.- source: 1news * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!