கட்டாயம் ஒரு வயது குழந்தைகளுக்கு தர வேண்டிய உணவுகள்


ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். மருத்துவர்கள் 1-3 வயது நிறைந்த குழந்தைக்கு தினசரி 1300 கலோரிகளும் 16 கிராம் புரதமும் கொடுக்க வேண்டும் என்கின்றனர். ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது. பாக்கெட் பால் சுத்திகரிக்கப்படுவதால் கொழுப்பு, புரத அளவு மாறுபடலாம். எனவே பசும்பால் எருமைப் பால் இருந்தால் காய்ச்சி கொடுங்கள். கிவி பழம், அத்திப்பழம், நாவல் பழம், பலாப்பழம், கொய்யா பழம் கொடுக்கலாம்.

பலாப்பழம் கொடுக்கும்போது அளவாகக் கொடுக்க வேண்டும். விரைவில் செரிமானம் ஆகாது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இட்லி, தோசைக்கு சாம்பாரில் பருப்பு கூடுதலாக சேர்த்து ஊட்டுங்கள். அதேபோல் பாதாம், முந்திரி, வேர்க்கடலையும் கொடுக்கலாம். அவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருப்பு வகையாகக் கொடுங்கள். பசலைக் கீரையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதை நன்கு வேக வைத்து குழைத்து சாதத்துடன் கலந்து ஊட்டுங்கள்.

முட்டையை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் 10-11 மணி அளவில் வேக வைத்து தனியாக ஊட்டலாம். நன்கு வேக வைத்த மீனை முள் இல்லாமல் பார்த்து கவனமுடன் கொடுங்கள். கோழியை நன்கு வேக வைத்து கைகளில் மசித்துக் கொடுங்கள். ஏனெனில் விரைவில் ஜீரணிக்காது. உபாதையாகலாம். நாட்டுக்கோழி வாங்கி ஊட்டுவது நல்லது.

தயிர் /நெய் இவை இரண்டிலும் போதுமான அளவு புரதச்சத்து உள்ளது. எனவே தயிர் சாதம் ஊட்டலாம். நெய் சாதத்துடன் தினமும் சிறிதளவு பிசைந்து ஊட்டலாம். குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்கள் குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என பார்த்துவிட்டுக் கொடுங்கள். அதேபோல் குழந்தை அவற்றை சாப்பிடவில்லை எனில் அவர்கள் மறுக்காதவாறு வேறெந்த வழிகளில் கொடுக்கலாம் என சிந்தித்து ஊட்டிப் பாருங்கள்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!