30 நிமிட மதிய குட்டித்தூக்கம் பற்றி புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது..?


மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்து மதிய குட்டித்தூக்கத்தை தவிர்க்கவேண்டாம் என்று சொல்கிறது புதிய ஆராய்ச்சி.

மதியம் சாப்பிட்டு முடித்ததும் சிலருக்கு கண்களை மூடும் அளவுக்கு லேசான கிறக்கம் ஏற்படும். அப்படியே குட்டித் தூக்கம் போடலாம் என்ற நிலைக்கு உடல் தயாராகும். ஆனால் மனமோ, அலுவலக நேரத்தில் தூங்கக்கூடாது என்று எச்சரிக்கும். அதனால் அருகில் உள்ளவர்களிடம் பேசுவது, ஆன்லைனில் ஏதாவது வீடியோ பார்ப்பது என்று தூக்கத்திற்கு கடிவாளம் போட முயற்சிப்பார்கள். ஆனால் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்து மதிய குட்டித்தூக்கத்தை தவிர்க்கவேண்டாம் என்று சொல்கிறது புதிய ஆராய்ச்சி.

`மதிய உணவுக்கு பிந்தைய லேசான தூக்கம் நல்லது. தூங்கி எழுந்ததும் உற்சாகமாக செயல்பட்டு வேலையில் நேர்த்தியை காட்ட முடியும். பிரச்சினைக்குரிய செயல்களுக்கு கூட தீர்வு காணும் அளவுக்கு மூளை உற்சாகமாக வேலைசெய்யும்’ என்று இங்கிலாந்தில் உள்ள ப்ரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மதியம் ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இடையில் இந்த தூக்கத்தை மேற்கொள்ளலாம் என்கிறார்கள். இரவில் விழித்து பணி செய்பவர்கள், இரவில் வாகனம் ஓட்டிச்செல்கிறவர்கள் இதை கடைப்பிடிப்பது அவசியம் என்றும் சொல்கிறார்கள். குட்டித்தூக்கமான அந்த `பவர் நாப்’ முடிந்து எழுந்ததும் ஒரு கப் காபி அல்லது டீ பருகினால் உற்சாகம் இரட்டிப்பாகும் என்பதும் அவர் களது கருத்தாக இருக்கிறது. ஆனால் இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால், அந்த தூக்க நேரம் 30 நிமிடத்தை கடந்துவிடக் கூடாது. கடந்தால், அது நீண்ட உறக்கமாகி அழகு, ஆரோக்கியத்தை பாதிக்கவும் செய்யுமாம்.

நமது செல்போனை சுவிட் ஆப் செய்வது போன்று நமது உடலை சுவிட் ஆப் செய்ய முடியாது. நாம் தூங்கும்போதும் மூளையும், உடலும் பிசியாக இயங்கிக்கொண்டுதான் இருக்கும். நினைவுகளை பாதுகாப்பது, எலும்புகளை பலப்படுத்துவது, புதிய செல்களை உருவாக்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீரமைப்பது போன்று ஏராளமான பணிகளை அது செய்துகொண்டேதான் இருக்கும். அதனால் மூளையின் செயலுக்கு உத்வேகம் கொடுக்க 30 நிமிட பகல் உறக்கம் அவசியம் என்கிறது ஆராய்ச்சி.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!