நான் பகவானாகவும் வருவேன்… பார்க்க சகிக்காத பக்கிரியாகவும் வருவேன்…!


பாபா.. பக்தர்களுக்கு பகவானாக காட்சியளித்ததை விட பக்கிரியாக காட்சியளித்ததுதான் அதிகம். எனக்கு பாபாவை பிடிக்கும். நான் பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவன். என் வேண்டுதலை பாபா நிச்சயம் நிறைவேற்றுவார். பாபாவால் தான் இது சாத்தியமாயிற்று. பாபாவால் மட்டுமே இதைச் செய்ய முடிந்தது. என் சுமைகளை பாபா சுமப்பார் என்று பக்தர்கள் பாபாவை முழுமையாக சரணடைந்த பிறகு எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டியதில்லை.ஏனெனில் உங்கள் சுமைகளைச் சுகங்களாக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன். என் மீது உங்கள் நம்பிக்கையை மட்டும் செலுத்துங்கள். உங்கள் கர்மாக்களை வெற்றியோடு கடக்க என் கரம் பிடித்துக்கொள்ளுங்கள் என்று தன்னுடைய கரம் நீட்டி காப்பாற்றும் பக்கிரிக்கும் பிடித்தமான பக்தர்கள் யார் தெரியுமா?நம்பிக்கை, பொறுமை, கருணை, அன்பு மிக்க பக்தர்கள் தான். சுய தோற்றம் கண்ணைப் பறிக்கும் அழகில் மின்னி , அகத்தோற்றம் அழுக்கை அடைத்து வைத்திருந்தால் பகவானுக்கல்ல.. பார்த்து உணரும் மனிதர்களும் தள்ளிதான் போவார்கள். நமது அன்பை பெறுவதற்கு வேண்டிய தகுதி அவர்களது உள்ள அழகுதான் என்பதை பாபா உணர்த்திய நிகழ்வு இது.


ஷீரடியில் பாபாவைக் காண எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள். ஒருமுறை முற்றிய தொழுநோயைக் கொண்ட ஒருவர் பாபாவைக் காண வந்திருந்தார். நோயின் தாக்கம் அவரால் நடக்க முடியவில்லை. உடம்பில் இருக்கும் பாகங்கள் தனியாக கழண்டு விழுவதைப் போல் இருந்தது. பாபாவைத் தரிசிக்க மூன்று படிகளைக் கூட கடந்து வர முடியாமல் மிகுந்த சிரமத்துடன் கண்களில் அன்பை தேக்கி கையில் ஒரு பொட்டலத்துடன் பாபாவை நாடினார். பாபாவின் அருகில் அமர்ந்திருந்தவர்கள் அனைவருக்கும் அவரது தோற்றம் பிடிக்கவில்லை. யாரும் அவருக்கு உதவவும் இல்லை. அருவருக்கத்தக்க அந்த தோற்றத்தைக் காண சகிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டனர். வந்தவருக்கு தான் பாபாவைத் தவிர ஒன்றும் தெரியவில்லையே. பாபாவைப் பார்த்தபடி படியேறி வந்தவர் பாபாவின் அருகில் வந்து அவரது பாதம் பற்றினார். அவரது கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. தன்னைக் காப்பாற்றுங்கள் என்பதற்காக வந்த கண்ணீர் அல்ல அது. தன்னுடைய பிறவிப்பயனாக பாபாவைக் கண்ட ஆனந்தக் கண்ணீர் அது.

பாபாவின் அருகில் இருந்த தொழுநோயாளியின் மீது ஒரு வித துர்வாடை வீசியது. பாபாவின் அருகிலிருந்தவர்கள் வயிற்றைப் புரட்டியது. சீக்கிரம் போனால் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் அங்கிருந்தவர்கள் தொழுநோயாளியை வெறித்தார்கள். ஆனால் பாபாவின் பார்வையில் சுற்றியிருந்தவர்களுக்கு வெலவெலத்துப் போயிற்று. பாபாவுக்கு நமது எண்ணம் புரிந்துவிட்டது என்று அங்கிருந்தவர்கள் நடுங்கினார்கள். இத்தகைய நடவடிக்கையை காணாத தொழுநோயாளி பாபாவின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் பாபாவை வணங்கி விடைபெற மனமில்லாமல் வெளியேறினான். பாபா அவனிடமிருந்த பொட்டலத்தைக் கண்டார். ஆனால் அவன் அதை மறைத்தப்படி வெளியேறினான். அப்பாடி என்று மூச்சுவிட்டவர்களைத் திரும்பி பார்த்தார் பாபா. அவர்களுக்கு அவர் ஏதோ சொல்வது போல் இருந்தது. பாபா பணியாளனிடம் மீண்டும் அந்த தொழுநோயாளியை அழைத்துவர கட்டளையிட்டார். பாபாவின் கட்டளையாயிற்றே மீற முடியுமா? ஓடிச்சென்ற பணியாளன் இம்முறை அவரை கைத்தாங்கலாக அணைத்தப்படி அழைத்து வந்தான். எனக்கு என்ன கொண்டுவந்தாய்? எனக்காக கொண்டு வந்ததைக் கொடுக்காமல் போகிறாயே..என்று கேட்டபடி பொட்டலத்தைப் பார்த்தார்.


தொழுநோயாளியின் உள்ளம் உருகியது. சிறிது தயங்கியபடி அந்தப் பொட்டலத்தை நீட்ட பாபா அதைப் பிரித்து அதனுள் இருந்த இனிப்பு பேடாவை வாயில் போட்டுக் கொண்டு அருகிலிருந்தவர்களிடம் கொடுத்தார். பாபாவின் சொல்லை மீறமுடியுமா என்ன.. வேறு வழியின்றி அதை எல்லோரும் சாப்பிடும்படி ஆயிற்று. பாபாவி டமாவது… மறுப்பதாவது… திருப்தியடைந்த பாபா மீதி பொட்டலத்தை அவரிடம் கொடுத்து அவரை வழியனுப்பி வைத்தார். சிறிது நேரம் கழித்து பாபா சுற்றியிருந்தவர்களிடம் ஏன் எல்லோரும் அவனை வெறுத்தீர்கள்? அன்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதைப் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் எவ்வித தகுதியும் தேவையில்லை. உள்ளத்தில் இறைவன் குடியிருக்க அன்பு தான் பிரதானமாக இருக்க வேண்டும் . எனக்கு நீங்களும், அவனும் வேறல்ல ஒன்றுதான். அதுபோல் உலகில் இருக்கும் உயிர்களும் நானும் கூட ஒன்றேதான் என்றார். சுற்றியிருந்தவர்கள் தலைகவிழ்ந்தனர்.

இப்போது தெரிகிறதா? பார்க்குமிடமெல்லாம் பாபா என்று கூறுவது இதற்கு தான்.கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை கருணையோடு,இயலாமல் இருப்பவர்களுக்கு செய்தாலும் அவரைத் தான் சென்றடையும்.பாபாவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் பாபாவுக்கு பிடித்தமான பக்தர்களாக மாற …பாபாவிடம் நீங்கள் கொண்ட அன்பு பார்க்கும் உயிர்களிடமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். என் மீது நீ கொண்ட நம்பிக்கையை நான் உறுதிபடுத்துகிறேன். உன் அன்பையும் பொறுமையையும் அனைவரிடமும் ஒன்றாகவே காட்டு. நான் பகவானாகவும் வருவேன். பார்க்க சகிக்காத பக்கிரியாகவும் வருவேன். உன் அன்பை சோதிப்பதற்காக அல்ல… உன்னைப் பக்குவப்படுத்துவதற்காக என்னும் பாபாவின் வார்த்தையை வேதவாக்காக கடைப்பிடிப்போம்.

ஓம் சாய்ராம்.-source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!