மார்கழி மாதத்தில் ஆலயங்களை அதிகாலையிலேயே திறப்பது ஏன்?


மார்கழி மாதத்தில் எல்லா ஆலயங்களையும் அதிகாலையிலேயே திறந்து வழிபாடு செய்வது என்பது குறிந்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மார்கழி மாதம் பிறந்து விட்டால், எல்லா ஆலயங்களையும் அதிகாலையிலேயே திறந்து அபிஷேகம், பூஜை, ஆராதனை என்று பக்திப் பெருக்கை ஊரெங்கும் பரவச்செய்வர். மற்ற மாதங்களில் சற்று தாமதமாக எழுபவர்கூட மார்கழியில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தமக்குகந்த ஆண்டவனைத் துதிப்பர்.

வைணவர்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை, தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி, வேங்கடேச சுப்ரபாதம் போன்ற திருப்பாடல்களைப் பாடுவர். சைவர்கள் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை சிவன்மீது பாடிய திருப்பள்ளியெழுச்சி, திருவண்ணாமலையில் பாடிய திருவெம்பாவை முதலிய திருப்பாடல்களைப் பாடுவர். ஜீவாத்மா தனது தாமச குணத்தை நீக்கி, இறைவனைத் துதித்து பரமாத்வுடன் இணையவேண்டும் என்ற தத்துவத்தையே இவை விளக்குகின்றன. அதிகாலையில் இத்தகைய வழிபாடுகள் செய்யும்போது மனம் தெளிவுடன் இருக்கும். அதனால் மனோலயம் எளிதில் வசப்படும்.

மார்கழிக்கு ஏன் இத்தனை சிறப்பு?

இந்த மாதத்தில்தான் மகாவிஷ்ணுவுக்குகந்த வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த நாளை கீதாஜெயந்தி என்று- கண்ணன் கீதை மொழிந்த நாளென்று கீதையை வாசிப்பார்கள்.

நடராஜப் பெருமானுக்குகந்த திருவாதிரையும் மார்கழியில்தான் அமைகிறது. அந்த நாளில் அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேகம் செய்து வீதியுலா வரச்செய்வர்.
“மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்’ என்பது கண்ணன் வாக்கு. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த வைகாசியையோ, ராமர் அவதரித்த சித்திரையையோ, திருமலைவாசனுக்குகந்த புரட்டாசியையோ, தான் அவதரித்த ஆவணியையோ கண்ணன் குறிப்பிடவில்லை. “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்றே கூறுகிறார்.

நமக்கு ஒரு வருடமென்பது தேவர்களுக்கு ஒருநாள். மார்கழி மாதம் அவர்களுக்கு விடியல் பொழுது. நமது விடியல் பொழுதும் தேவர்களின் விடியல் பொழுதும் மார்கழியில் ஒன்றுசேர்கிறது. இந்த சமயத்தில் செய்யப்படும் ஆன்மிக விஷயங்கள் யாவும் அதிக பலன்தரும் என்பர். அந்த சமயத்தில் தெய்வீக அதிர்வலைகள் (Divine Vibrations) வெளிப்படுவதாக ஒலியியல் (Sound Theory) கூறுகிறது. இது மிக உன்னத நிலையைத் தரக்கூடியது. இதைப் பெறுவதற்காகத்தான் மார்கழி அதிகாலை வழிபாட்டை நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!