ஒரு வாழைப்பழத்துக்காக மோதிக்கொண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள் – வைரலாகும் வீடியோ


கொரோனா வைரஸ் காரணமாக உணவு கிடைக்காததால் ஒரு வாழைப்பழத்துக்காக மோதிக்கொண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள லோப்புரி நகர் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த நகரில் ஆயிரக்கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவு அளிப்பது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக லோப்புரி நகரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் குரங்குகள் உணவு கிடைக்காமல் பசியில் அல்லாடுகின்றன. யாராவது உணவு அளிக்க மாட்டார்களா என குரங்குகள் தனித்தனியாகவும் குழுவாகவும் சாலையில் உலா வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு குரங்கிடம் ஒரு வாழைப்பழத்தை வீசினார். இதை பார்த்ததும் சாலையில் உலாவிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான குரங்குகள் ஓடி வந்தன.

கிடைத்த ஒரு பழத்தை யார் உண்பது என்பதில் குரங்குகளிடம் கடும் போட்டி ஏற்பட்டது. பழத்துக்காக நூற்றுக்கணக்கான குரங்குகள் கடுமையாக மோதிக் கொண்டன.

மொத்த குரங்கு கூட்டமும் சாலைக்கு வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் வாழைப்பழத்தை ஒன்றிடம் இருந்து ஒன்று பறித்துக் கொண்டே குரங்குகள் அனைத்தும் ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றன.

ஒரு வாழைப்பழத்துக்காக நூற்றுக்கணக்கான குரங்குள் மோதிக்கொண்டதை அங்கிருந்த நபர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!