ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி… அலறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்…!


பொன்னேரியில் ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டதால் கடை முன்பு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பிரியாணி வாங்க திரண்ட கூட்டத்தை கண்டு திணறினர்.

கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக சமூகவலை தளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதனால் கோழிக்கறி வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

கோழிக்கறி விற்பனை அடியோடு சரிந்துள்ளது. இதேப்போல் சிக்கன் பிரியாணியும் வாங்க பொதுமக்கள் தயங்குகிறார்கள்.

இதன் காரணமாக ஓட்டல்களில் சிக்கன் பிரியாணி விற்பனை மந்தமாக உள்ளது. இந்த நிலையில் பொன்னேரியில் 1 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்பட்டுள்ளது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த கடையில் நேற்று 120 கிலோ கோழிக்கறியில் பிரியாணி தயாராகி இருந்தது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய வியாபாரம் இரண்டு மணி நேரத்திலேயே முடிந்தது.

ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படுவது தெரிந்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு ஒரு ரூபாய்க்கு பிரியாணி வாங்கி சென்றனர்.

கூட்டம் அலைமோதியதால் கடை முன்பு கடும் நெரிசல் ஏற்பட்டது. பொன்னேரி போலீசார் பிரியாணி வாங்க திரண்ட கூட்டத்தை கண்டு திணறினர். அவர்கள் கூட்டத்தை வரிசைப்படுத்தி அனுப்பி வைத்தனர். விற்பனை தொடங்கி 2 மணி நேரத்திலேயே அனைத்து பிரியாணியும் விற்று தீர்ந்தது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுபற்றி பிரியாணி கடை உரிமையாளர் கூறும்போது, ‘கொரோனா பீதியால் சிக்கன் பிரியாணி வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வந்தனர்.

புதிதாக திறக்கப்பட்ட கடையில் சிக்கன் பிரியாணி விற்பனை ஆகுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவே முதல் நாளில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்றோம்’ என்றார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!