இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா… 24 மணி நேரத்தில் 189 பேர்…!


இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 189 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1016 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இதற்கிடையில், சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் கொரோனா கோரத்தாண்டம் ஆடிவருகிறது. அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் (20) கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தாலியை உலுக்கி எடுத்துவரும் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 189 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1016 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 15 ஆயிரத்து 113 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதல் காரணமாக இத்தாலி முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!