பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா..?


தை மாதத்தின் முதல் நாள். அதாவது நாளை (15.1.2020) புதன்கிழமை, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உலக உயிர்களின் தோற்றத்திற்கும், இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் சூரிய பகவான். ‘பிரபஞ்ச சக்தி உண்மையா?’ என்ற கேள்விக்கு, கண்கண்ட தெய்வமாக காட்சி தருபவர்தான் சூரிய பகவான். சூரிய ஒளி இல்லாமல் உலகில் புல் பூண்டு கூட முளைக்காது. நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படும் நாள்தான் இது.

ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, கிடைத்த புது அரிசியோடு, சர்க்கரை, பால், நெய் சேர்த்து, புதிய மண் பானையில் அவற்றை இட்டு, புதிய மண் அடுப்பில் வைத்துப் பொங்கலிட வேண்டும். அந்தப் பொங்கலோடு, கனிகள், காய்கறிகள், கரும்பு போன்வற்றையும் சூரியனுக்கு படைத்து, உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் அன்று வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை அடுப்பின் மீது வைக்க வேண்டும். பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பானை வைக்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கலை நைவேத்தியமாக படைக்கும்பொழுதும் சங்கு ஊதி வழிபட வேண்டும்.

மங்கலம் பொங்க மனையில் பால் பொங்கும் பொழுது “பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப்பொங்கல்” என்றும் மூன்று முறை சொல்லிப் பலவிதமான காய்கறிகளை சேர்த்துக் கூட்டுக்குழம்பு வைத்து, அதனை சூரிய பகவானுக்கு படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு. கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும். வாழ்க்கை இனிக்கும் கரும்பாக அமைய கரும்பும் வைத்து வழிபட்டால், பொங்கும் பொங்கலைப் போல் இன்பம் பொங்கும்; இனிமை பொங்கும்; அன்பு பொங்கும்; ஆற்றல்பொங்கும். சோறு படைக்கும் பொழுது, சூரியன் இருந்து சாப்பிடும் விதத்தில் இலையின் நுனிப்பகுதியும், அடிப்பகுதியும் அமைவது சிறப்பாகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணிக்குள் அல்லது காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!