கேரளாவில் ரூ.6 கோடி லாட்டரி பரிசு பெற்றவருக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டம்..!


கேரளாவில் ரூ.6 கோடி லாட்டரி பரிசு பெற்ற முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டம் அடித்தது.

திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினாகரன் பிள்ளை (வயது 60). வெள்ளனூர் பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலரான இவருக்கு லாட்டரிச்சீட்டுகள் வாங்கும் பழக்கம் உண்டு.

இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான ரூ.6 கோடி கிடைத்தது. இந்த பரிசு பணம் மூலம் திருப்பாற்கடல் கிருஷ்ணசுவாமி கோவில் அருகே ஒரு பழைய வீட்டையும், அதன் அருகே சிறிது நிலத்தையும் விலைக்கு வாங்கினார்.

இந்த நிலையில் சமீபத்தில் அந்த நிலத்தில் விவசாயப் பணி செய்ய ரெத்தினாகரன் பிள்ளை திட்டமிட்டார். இதற்காக தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு மண்ணை தோண்டும் பணி நடந்தது. அப்போது பூமிக்குள் மண் பானைகள் புதைந்து இருந்தது தெரிய வந்தது.

மொத்தம் 6 மண் பானைகளை தொழிலாளர்கள் தோண்டி எடுத்தனர். அதை திறந்து பார்த்த போது ஏராளமான செப்பு நாணயங்கள் அதில் இருந்தது தெரிய வந்தது. புதையல் கிடைத்த தகவல் அக்கம், பக்கத்தில் பரவியதால் அங்கு பொது மக்கள் கூடி பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த தகவல் கிளிமானூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், அரசு அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அந்த மண்பானைகளை கைப்பற்றி அதில் இருந்த நாணயங்களை எண்ணிப் பார்த்தனர். மொத்தம் 2 ஆயிரத்து 600 செப்பு நாணயங்கள் அதில் இருந்தது தெரியவந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் பாலராமவர்ம மகாராஜா காலத்து நாணயங்கள் அவை என்பது தெரியவந்தது. அந்த நாணயங்களை அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!