உங்கள் துயரங்களையும் பாபாவின் பாதத்தில் சமர்ப்பியுங்கள்…!

பல நேரங்களில், மனிதர்கள் வெளிப்புறமான காட்சிகளில் ஏமாந்துபோகிறார்கள். பகட்டானவை உயர்ந்தவை என்றும், அழுக்கானவை தாழ்ந்தவை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள். தாங்கள் காண்பதைக் கொண்டே தீர்மானிக்கிறார்கள். ஆனால், உண்மை பல நேரங்களில் தலைகீழாய் இருக்கிறது. பித்தனும் சித்தனும் ஒன்றுபோலத் தோன்றினாலும் இருவரும் ஒருவர் அல்ல….

யோகா கற்பதற்காகச் செல்லும் அநேகர் அதை ஓர் உடற்பயிற்சியாகச் செய்கிறார்கள். ஒரு சிலர், இந்த உடற்பயிற்சியின் மூலம் ஆன்ம நிலையில் உயர்வடையலாம் என்று நம்புகிறார்கள். ஆனால், யோக சாதனை என்பது வெறும் பயிற்சியினால் கூடிவருவதில்லை. பல நூல்களைக் கற்பதன் மூலமும் அதை அடையமுடியாது. அதைப் பூர்ணமாகப் பெற சத்குருவின் அருள்தொடுதலும் வழிகாட்டுதலும் தேவை. ஷீரடி சாயியின் அருள் கடாட்சம் பெற்ற ஒருவர் எளிதில் அதில் தேர்ந்தவராகிறார்.


பாபாவின் பக்தரான நானா சாஹேப் சாந்தோர்கர் ஷீரடி வந்தபோது, அவரோடு யோக சாதகர் ஒருவரும் வந்தார். யோக நூல்களில் நல்ல தேர்ச்சியும், பயிற்சியும் பெற்றவராக இருந்தபோதிலும், அவரால் சமாதி நிலையில் சில நிமிடங்கள் கூட நிலைத்திருக்க இயலவில்லை. அந்தக் குறை அவர் மனதில் தங்கியிருந்ததால், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவித்தார். அப்போது நானா சாஹேப், பாபா, தொடர்ந்து பல மணி நேரங்கள்கூட சமாதி நிலையில் மூழ்கியிருப்பார். நீங்கள் அவரிடம் வழிகாட்டுதல் பெற்றால் இன்னும் அதிக சாதனைகளைச் செய்யலாம்" என்று வழிகாட்டினார். ஏற்கெனவே பாபா குறித்து அறிந்திருந்த அந்த யோக சாதகர்,அடுத்தமுறை நீங்கள் ஷீரடிக்குச் செல்லும்போது நானும் உங்களோடு வருகிறேன்” என்று நானாவிடம் கூறினார். அதேபோல் நானாவும் அவரும் அன்றைய நாளிலேயே ஷீரடிக்குச் சென்றனர்.

அந்த யோக சாதகர், நானாவுடன் துவாரகாமாயி சென்றபோது, பாபா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் பாபாவை மேலும் கீழுமாகப் பார்த்தார். பாபா அழுக்கான உடை அணிந்திருந்தார். அவர் தட்டில் இருந்த தீய்ந்துபோன ரொட்டியைக் காண்கிறபோதே அந்தச் சாதகருக்கு முகம் மாறியது. பாபா, பச்சை வெங்காயத்தைக் கடித்துக்கொண்டே அந்த ரொட்டியைப் பிய்த்துத் தின்றுகொண்டிருந்தார். வெங்காயத்தை அப்படித் தின்பதை அந்தச் சாதகரால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆசாரத்தின் காரணமாக, வெங்காயத்தைத் துறந்துவிட்டிருந்த அவருக்கு, வெங்காயத்தை உண்ணும் பாபாவின் மேல் இதுவரைக் கேள்விப்பட்டிருந்த அத்தனை மரியாதையும் போய்விட்டது. இவர் எப்படித் தனக்கு வழிகாட்ட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

எதை உண்கிறோம் என்பதிலிருந்து நம் ஆன்ம ஞானம் உயர்வடைவதில்லை. மாறாக, ஞான நிலையை அடைந்துவிட்ட யோகிகளுக்கு உணவு ஒரு பிரச்னையே இல்லை. பாபா, தன் வாழ்வில் பல நேரம் உண்ணாமல் இருந்ததுண்டு. உண்பதும், உறங்குவதும், விழித்திருப்பதும் புறவயமாக அவரை நோக்கும் பக்தர்களுக்காகவேயன்றி அவருக்காக அல்ல.


பாபா, அந்தச் சாதகரின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டார். அவர் மேல் கருணை கொண்டார். அவர் எப்போதும் யாரிடத்தும் நேரடியாகக் குற்றம் சுமத்திப் பேசியதில்லை. பாபா நானாவை நோக்கி, “நானா, வெங்காயத்தை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவன் மட்டுமே அதை உண்ண வேண்டும். மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது” என்றார். இதைக் கேட்டதும் நானாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அந்தச் சாதகருக்கோ தூக்கிவாரிப்போட்டது. தன் மனதின் கருத்தை பாபா இப்படி வெளியிட்டுவிட்டதை அறிந்து வருந்தினார். நெடுஞ்சாண் கிடையாக பாபாவின் பாதங்களில் விழுந்தார்.

தன்னைப் பணிந்துகொண்டவர்களின் துயரைச் சொல்லாமல் அறிந்துகொள்ளும் தயாளனான பாபா, அவரின் சிக்கல்களை அறிந்து அவை தீர ஆசீர்வதித்தார். அவர் ஷீரடியை விட்டுச் செல்லுமுன் யோக சாதனைகள் பலவற்றைத் தேர்ந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?


ஆலந்தி என்னும் ஊரில் வாழ்ந்த துறவி ஒருவர் ஷீரடி வந்து பாபாவை தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார். அவருக்குக் காதில் தீராத வலி இருந்தது. இதற்காக ஒரு முறை அவர் அறுவை சிகிச்சை கூடச் செய்துகொண்டார். ஆனால், சில நாள்களிலேயே மீண்டும் அந்த வலி வந்துவிட்டது. இனி, விதி விட்ட வழி என்று முடிவு செய்துகொண்ட ஆலந்தி சுவாமிகள், தனது நீண்ட நாள் ஆசையின்படி ஷீரடிக்குச் சென்று பாபாவை தரிசிக்க முடிவு செய்தார். அவர் ஷீரடிக்குச் சென்று பாபாவைப் பணிந்து வணங்கினார். அப்போது ஷாமா பாபாவிடம், சுவாமிகளின் காது வலியைத் தீர்த்து வையுங்கள்" என்று வேண்டிக்கொண்டார். உடனே பாபா தனது அருள்கரத்தை உயர்த்தி,அல்லா சரி செய்வார்” என்று ஆசி வழங்கினார்.


பாபாவிடம் சரணடைந்து விட்டபின் நம் பழைய துயர்களை, பிரச்னைகளை, நோய்களைக் குறித்த கவலை நமக்குத் தேவையே இல்லை. தெய்வத்தின் பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிப்பதுபோல, சாயியின் பாதங்களில் நம் துக்கங்களைச் சமர்ப்பித்தால் போதுமானது. அந்தக் கணம் முதற்கொண்டு பாபா, அவற்றிலிருந்து உங்களைப் பாதுகாப்பார்.

ஆலந்தி சுவாமிகளுக்கும் அப்படித்தான் நடந்தது. பாபா அப்படிச் சொன்னதுமே அவருடைய காதிலிருந்த வலி மெல்ல மெல்லக் குறையத் தொடங்கி, அடியோடு மறைந்தும் விட்டது. ஆனால், காதிலிருந்த வீக்கம் மட்டும் அப்படியே இருந்தது. அதை அகற்றிக்கொள்வதற்காக மருத்துவரிடம் சென்றார். ஆலந்தி சுவாமிகளின் காது வீக்கத்தைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறிவிட்டார். அதுதான் பாபாவின் அருள் மகிமை. பாபாவின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும் அனைத்துத் துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடுமே…- source: vikatan * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!