தடகள போட்டியில் உலக சாதனை படைத்த உகாண்டா வீரர்..!


ஸ்பெயினில் நடந்த தடகள போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில் துரியா ஸ்டேடியத்தில் நடந்த தடகள போட்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இவற்றில் விளம்பரதாரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தனர்

இந்த தடகள போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜோசுவா செப்டெகி (வயது 24) கலந்து கொண்டு 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் கெனெனிசா பெகெலே 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இதனை ஜோசுவா முறியடித்து உள்ளார்.

அவர் கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த உலக சாம்பியன்சிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். கடந்த ஆகஸ்டில் மொனாக்கோ நகரில் நடந்த டையமண்ட் லீக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

இவை தவிர்த்து, கடந்த டிசம்பரில் வேலன்சியா நகரில் நடந்த 10 கிலோ மீட்டர் ரேசிங் பிரிவில் கலந்து கொண்டு இலக்கை அடைந்து, 6 வினாடிகள் வித்தியாசத்தில் 10 ஆண்டு கால சாதனையை ஜோசுவா முறியடித்திருக்கிறார்.

இதேபோன்று மகளிர் பிரிவு 5 ஆயிரம் மீட்டர் தடகள போட்டியில் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை லெடிசென்பெட் கிடி (வயது 22) பந்தய தொலைவை 14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து உலக சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு, அவரது நாட்டை சேர்ந்த மற்றொரு தடகள வீராங்கனையான திருனேஷ் திபாபா கடந்த 2008ம் ஆண்டு ஓஸ்லோவில் நடந்த போட்டியில் 14 நிமிடங்கள் 11.15 வினாடிகளில் பந்தய இலக்கை அடைந்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இதனை கிடி முறியடித்து உள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!