ஏர்டெல் ஹோம் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1000 ஜிபி டேட்டா பெற முடியும்.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ஹோம் பிராட்பேண்ட் பயனர்கள், தேர்வு செய்த திட்டத்தில் பயன்படுத்தாத டேட்டாவினை அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதம் பயன்படுத்தும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கும் இதேபோன்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள பாரதி ஏர்டெல் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய திட்டம் சார்ந்த முக்கிய தகவல்கள்:
– டேட்டா ரோல் ஓவர் (Data Rollover) என அழைக்கப்படும் புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா அடுத்த மாதத்திற்கான கட்டண முறையில் சேர்க்கப்பட்டு விடும்.
– புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1000 ஜிபி வரையிலான டேட்டா சேர்க்க முடியும். இதனை மை ஏர்டெல் செயலி மூலம் பார்க்க முடியும்.
– பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தில் இந்தியா முழுக்க 21 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதாக பாரதி ஏர்டெல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– ஏர்டெல் நிறுவனம் இதே போன்ற சலுகையை தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை மாத வாக்கில் அறிவித்தது.
ஏர்டெல் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இனி, பயன்படுத்தாத டேட்டா குறித்து கவலை கொள்ள தேவையில்லை, அது அவர்கள் பயன்படுத்த எப்போதுமே இருக்கும் என பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!