இன்று 21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்


உலகின் முதன்மையான தேடுதளமாக செயல்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் 21வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரின் கூட்டணி தேடுபொறியை உருவாக்கியது. அதற்கு googol என்று பெயரிட்டனர். இதற்கு கணிதத்தில் 10 ன் அடுக்கு 100 என்று அர்த்தம். இதுவே பின்னர் கூகுள்(Google) என்று ஆனது.

1997ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று google.com என்கிற டொமைன் பதிவு செய்யப்பட்டது. 1998ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி கூகுள் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இதில் எதை பிறந்த நாளாகக் கொண்டாடுவது? என்ற குழப்பத்தின் காரணமாகவே 2005-ம் ஆண்டு வரை செப்டம்பர் 7-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடியது. 2005-க்கு பிறகு செப்டம்பர் 8, செப்டம்பர் 26 என கொண்டாடப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 27-ம் தேதி என முடிவு செய்யப்பட்டு, பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

கூகுள் இணையதள தேடுதலின் ஜாம்பவான் என்றால் மிகையல்ல, சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் 4.5 பில்லியன் பயனர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் கூகுளின் 21வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு கூகுள் நிறுவனம் தனது முகப்பை அலங்கரித்துள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன்பாக கூகுளின் முகப்பு பக்கம் இருந்ததை நினைவுப்படுத்தும் வகையில் பழைய கணினியில் தேடுபொறி காட்சியளிப்பதனை போன்ற டூடுலை வெளியிட்டுள்ளது. பழைய கணிப்பொறியில் கூகுள் பக்கம் திறக்கப்பட்டு, கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!