அதிபர் தேர்தலில் மீண்டும் சிறிசேனா? ரணில் எந்த நேரத்திலும் கைது?


இலங்கை மத்திய வங்கி நிதி மோசடிகள் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற தகவல்களால் அசாதாரண நிலை நிலவுகிறது.

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிக்கை நேற்று இரவு வெளியிடப்பட்டது.

அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்கலாம் என்கின்றன தகவல்கள்.

இதனிடையே அதிபர் தேர்தலில் மீண்டும் பொதுவேட்பாளராக போட்டியிடுவது குறித்து அதிபர் சிறிசேனா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்கனவே சிறிசேனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


ரணிலை கைது செய்து சிறையிலடைத்த பின்னர் அவருக்குப் போட்டியாக மல்லுக்கட்டி நிற்கும் சஜித பிரேமதாசவை பிரதமராக்கிவிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவையும் தாம் பெற்றுவிட முடியும் என்பது சிறிசேனாவின் கணக்கு. மேலும் ஜேவிபி, முஸ்லிம் கட்சிகள், தமிழர் தரப்பு ஆகியோரின் ஆதரவை பெறுவதிலும் சிறிசேனா முனைப்பு காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால்தான் ரணிலை மத்திய வங்கி நிதி மோசடிகள் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான சாத்தியம் மறுப்பதற்கில்லை என்கின்றன கொழும்பு தகவல்கள்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!