சிறுவனின் உயிரை காப்பாற்ற 366 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நயினார் முகமது. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெசிமா. இவர்களது மகன் முகமது அமீர் (வயது 16). மலேசிய குடியுரிமை பெற்றுள்ள இவர் அங்கு படித்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த முகமது அமீருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென முதுகு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் பரிசோதித்தபோது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கான மருந்து மாத்திரைகள் கொடுத்துள்ளனர்.

கடுமையான வலி காரணமாக முகமது அமீர் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே படுத்த நிலையில் இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் முகமது அமீருக்கு மீண்டும் முதுகு வலி அதிகமானதால் வலியால் கதறி துடித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக அவரை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோயின் தீவிரம் அதிகமாகி உள்ளதாகவும், உடனடியாக 4 முதல் 5 மணி நேரத்திற்குள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அறுவை சிகிச்சை மூலம் பிழைக்க வைக்க முடியும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்

மதுரை சென்று விமானம் மூலம் புதுச்சேரிக்கு செல்வதற்கு நேரம் அதிகமாகும் என்பதால் ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. த.மு.மு.க.வின் ஆம்புலன்சில் முகமதுஅமீர் ஏற்றப்பட்டு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்சு டிரைவர் ஜாஸ் என்பவர் உயிரின் அருமையை உணர்ந்து மிகவும் பக்குவமாக சரியான வேகத்தில் புதுச்சேரிக்கு சென்றார். செல்லும் வழியில் முன்அறிவிப்பு செய்ததன் பயனாக த.மு.மு.க. தொண்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் சாலையில் போக்குவரத்தை சரிசெய்து வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

5 மணி நேரத்திற்கு முன்னதாகவே கொண்டு சென்று உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் முகமது அமீர் தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். பொதுவாக ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மிதமான வேகத்தில் சென்றால் 9 முதல் 10 மணி நேரமாகும்.

ஆனால் உயிரின் அருமை கருதி கொண்டு செல்லப்பட்டதாலும், த.மு.மு.க. தொண்டர்கள் மற்றும் போலீசாரின் உதவியாலும் வழிநெடுக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சரியான நேரத்தில் கொண்டு செல்ல முடிந்தது. உரிய நேரத்தில் கொண்டு செல்ல உதவியவர்களுக்கு வாலிபரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.