‘நான் ஒரு சைக்கோ’.. சிபிசிஐடியிடம் உண்மையை கக்குவாரா கார்த்திகேயன்..?


“நான் ஒரு சைக்கோ” என்று சொன்னதையே திரும்ப திரும்ப கார்த்திகேயன் சொல்லி கொண்டு இருப்பதால், உமா மகேஸ்வரி கொலை வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிபிசிஐடி-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன்தான் கொலையாளி என்பதை கண்டறிந்து கைது செய்தனர். கார்த்திகேயனுக்கு 39 வயசாகிறது.

நேற்று போலீசாரிடம் கொலைகளை செய்தது தொடர்பான வாக்குமூலமும் அளித்தார். அவர் சொன்னதுபோலவே இன்னோவா கார் சர்ச் முன்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலையின் போது அணிந்திருந்த உடையில் ரத்தக்கறை ஏற்பட்டதாகவும், அதை கொஞ்சம் தூரம் சென்று வீசிவிட்டதாகவும் சொன்னார். அதன்படியே அவர் சொன்ன இடத்தில் ரத்தக்கறை படிந்த உடை இருந்தது. அதை போலீசார் மீட்டனர். அதேபோல காரையும் மீட்டனர். கொலை செய்த ஆயுதங்கள், கொள்ளையடித்த நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்த்திகேயன் சொன்னதுபோலவே தடயங்கள் கிடைத்தாலும், வாக்குமூலத்தில் பெருமளவு உண்மையானவை என்றாலும், 3 கொலைகளையும் தான் மட்டுமே செய்ததாக சொல்கிறார் கார்த்திகேயன். இங்குதான் போலீசாருக்கு சந்தேகம் எழுகிறது. ஒருவரே 3 கொலையையும் செய்திருக்க முடியாது என்பதே போலீசாரின் கணிப்பு. இதற்கு காரணம், வீட்டில் இருந்து 3 கைரேகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மற்ற கைரேகைகள் யாருடையது என்பதுதான் தற்போதைய குழப்பம்.

மேலும் சம்பவத்தன்று வேறு வேறு இடங்களில் கார்த்திகேயன் 2 பேருடன் பைக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டே போகும் வீடியோ காட்சி கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் யார் என்று தெரியவில்லை. மற்ற இருவரும் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்களை காட்டி கொடுத்தால், கூலிப்படை கும்பலின் தலைவன் சிக்கிக் கொள்வான் என்பதால் கார்த்திகேயன் உண்மையை மறைப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதனால் இந்த கொலை வழக்கின் பின்னணியில் நெல்லையை சேர்ந்த பிரபல கூலிப்படை ஒன்று இருக்கலாம் என்று சந்தேகம் வலுத்துள்ளது. கார்த்திகேயனும் தொடர்ந்து சொன்னதையே சொல்லி வருவதாலும் வழக்கில் தேக்கம் ஏற்படும் சூழல்உருவானது. அது மட்டும் இல்லை.. நான் ஒரு சைக்கோ என்று கார்த்திகேயனே அடிக்கடி சொல்லுவதுதான் போலீசாருக்கு இடிக்கிறது. அதனால்தான் வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக காரணம் சொல்லப்படுகிறது.

எனினும் இந்த வழக்கு திடீரென சிபிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பது விசாரணை போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து 6 நாள் ஆகிவிட்டது, குற்றவாளியையும் பிடித்தாகிவிட்டது, இறுதிகட்ட விசாரணையும் முடிவடையும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு ஏன் மாற்றப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!