காரில் மயங்கி கிடந்தவரை மீட்க சென்ற இடத்தில் 15 அடி நீள பாம்பு; தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவின் கொலராடோ நகரில் டென்வர் என்ற இடத்தில் கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளது. அதில் ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்து டென்வர் நகர தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்க சென்றுள்ளனர்.

அங்கு காரின் ஜன்னல் வழியே 15 அடி நீளத்திற்கு பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது. இதனை கண்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு அந்த பாம்பு காரின் மேற்கூரையில் சென்று படுத்து கொண்டது. இதனை படம் பிடித்து கொண்ட போலீசார் பின் விசாரணையில் இறங்கியதில் அது காரில் இருந்தவரின் வளர்ப்பு பாம்பு என தெரிய வந்தது. அவர் காரில் அந்த பாம்புடன் பயணம் செய்துள்ளார். அதனுடன் அவர் குடித்து விட்டு கார் ஓட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன்பின் அவர் குடிபோதையில் காரிலேயே மயங்கி கிடந்துள்ளார்.

இதனை அடுத்து, இந்த புகைப்படத்துடன், குடித்து விட்டு வாகனம் ஓட்டாதே. அதுவும் வளர்ப்பு பிராணிகளுடன் என்று டுவிட்டரில் தீயணைப்பு வீரர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கமெண்ட்ஸ் பிரிவில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அதில் ஒருவர், காரில் குடித்துவிட்டு ஒருவர் இருக்கிறார் என பாம்புகளுக்கு தெரியும். அதனால் காரில் இருக்க கூடாது என அவை அறியும் என பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று மற்றொருவர், பாம்பு காப்பாற்றப்பட்டு விட்டது. தீயணைப்பு வீரர்களுக்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.