தாக்குதலில் உயிர் பிழைத்து பள்ளிக்குத் திரும்பிய சிறுவன் – ‘சர்ப்ரைஸ்’ வரவேற்பால் நெகிழ்ச்சி..!


இலங்கைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் காயமடைந்து, மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் அளித்த வரவேற்பு நெகிழச் செய்திருக்கிறது.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கையை நிலைகுலையச் செய்தது. கொழும்பு, கொச்சிக்கடை, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வெளிநாட்டினர் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பிய அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உலக நாடுகள் உதவியுடன் இலங்கை தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், குண்டுவெடிப்புத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்குப் பின் பள்ளிக்குத் திரும்பிய மாணவன் ஒருவருக்கு அவரது பள்ளி அளித்த வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொழும்பில் உள்ள சர்வதேசப் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்புப் படித்து வரும் மாணவன் ஷெனான். கொச்சிக்கடை தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் காயமடைந்த அவர், கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சை முடிந்து இன்று அவர் பள்ளிக்குத் திரும்பினார். பள்ளிக்குச் சென்ற அவர், ஆசிரியர்கள், மாணவர்கள் அளித்த வரவேற்பில் நெகிழ்ந்திருக்கிறார். குண்டுவெடிப்புத் தாக்குதலில் முகத்தின் வலது பகுதி மற்றும் வலது கை ஆகிய பகுதிகளில் அவருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

காயத்திலிருந்து மீண்டு பள்ளி வந்த ஷெனானை கேக் வெட்டி சக மாணவர்கள் வரவேற்றனர். அதேபோல், பரிசுப் பொருள்கள், பூங்கொத்துகள் கொடுத்தும் அவரை ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!