ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அடுக்கடுக்கான சாதனை..!


உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தனர். அதன் விவரம் வருமாறு:-

* உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த 2-வது இந்தியர் ஷிகர் தவான் ஆவார். 1999-ம் ஆண்டு இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஜய் ஜடேஜா சதம் (100 ரன்) அடித்திருந்தார்.

* இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 23 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் 4-வது வீரராக இணைந்தார். அதே சமயம் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய சிறப்பு அவர் வசம் ஆனது. ரோகித் சர்மா 37 இன்னிங்சில் 2,037 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களுக்கு மேலாக எடுத்த மற்ற வீரர்கள் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (3,077 ரன்), வெஸ்ட் இண்டீசின் தேஸ்மான்ட் ஹெய்ன்ஸ் (2,262 ரன்), விவியன் ரிச்சர்ட்ஸ் (2,187 ரன்) ஆகியோர் ஆவர்.

* ஐ.சி.சி. நடத்தும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் (உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை) அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் தெண்டுல்கர், கங்குலி (தலா 7 சதம்) முதலிடத்தில் உள்ளனர். 2-வது இடத்தை ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா), சங்கக்கரா (இலங்கை) ஆகியோருடன் ஷிகர் தவான் (தலா 6 சதம்) பகிர்ந்துள்ளார். தவான் உலக கோப்பையில் 3 சதமும், சாம்பியன்ஸ் கோப்பையில் 3 சதமும் அடித்துள்ளார்.

* தவான்-ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் திரட்டியது. ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் தவான்-ரோகித் சர்மா இணையின் 6-வது செஞ்சுரி பார்ட்னர்ஷிப் ஆகும். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்- ஹைடன் ஜோடியின் சாதனையை (இவர்களும் 6 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்) சமன் செய்தனர்.

* உலக கோப்பை தொடரில் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 10-வது முறையாகும். அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

* தவானும், ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கூட்டாக 1,273 ரன்கள் (22 இன்னிங்ஸ்) சேர்த்து புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வேறு எந்த ஜோடியும் இவ்வளவு ரன்கள் எடுத்ததில்லை. வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ்-தேஸ்மான்ட் ஹெய்ன்ஸ் ஜோடியின் 1,152 ரன்கள் (29 இன்னிங்ஸ்) சாதனை முறியடிக்கப்பட்டது.

* உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 89 ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்தியாவின் ரோகித் சர்மா- ஷிகர் தவான் (தற்போதைய ஆட்டம்), இங்கிலாந்தின் கிரஹாம் கூச்-இயான் போத்தம் (1992-ம் ஆண்டு), தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்- கிரேமி சுமித் (2007-ம் ஆண்டு) ஆகியோர் மட்டுமே தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!