காதலியை திருமணம் செய்து வைக்காத விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை..!


கோவையில் காதலியை திருமணம் செய்து வைக்காத விரக்தியில் வேளாண் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலம் அருகே உள்ள கதையனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் இளங்கோ (வயது 19). இவர் கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் பயோடெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இளங்கோவன் நாமக்கல்லில் உள்ள பள்ளியில் படிக்கும் போதே இருந்து அவருடன் படித்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். தற்போது அந்த மாணவி நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

இளங்கோ விடுமுறையில் ஊருக்கு சென்றார். அப்போது தனது உறவினர் ஒருவருடன் சென்று மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரது தாயிடம் கேட்டுள்ளார். அவர் படித்து கொண்டு இருப்பதாலும் வயது குறைவாக உள்ளதாலும் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார்.

இதனால் கடந்த சில நாட்களாக இளங்கோ மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். மேலும் அவரை திருமணம் செய்வதற்காக முன்னேற்பாடாக தனது காதலிக்கு தாலி செயின், மெட்டி, திருமண செலவுக்கு தேவையான பணம் ஆகியவற்றையும் வைத்து இருந்தார்.

இந்தநிலையில் இளங்கோ விடுமுறை முடிந்ததும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு வந்தார்.

நேற்று அறையில் தனியாக இருந்த இளங்கோ தனது காதலியுடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இளங்கோ விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சகமாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று இளங்கோவனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!