தி.மு.க பிரமுகரின் மகனுக்கு தொடர்பா..? பொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்.!


தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி திமுக பிரமுகர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கொடூர சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்து அரசாணையை வெளியிட்டது.

இந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சமூகவலைதளங்களில் பரப்பி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப் பார்க்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும் பொள்ளாச்சி ஜெயராமன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்ற மணிவண்ணன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை ஏப்ரல் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டனர்.


இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவராகவும் உள்ள மயூரா ஜெயக்குமார் நேற்று விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!