இன்று மகாசிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?


சகலத்தையும் அருளும் இந்த சிவராத்திரி விரதத்தினை உரிய நெறிகளோடு கடைப்பிடிக்க வேண்டும். விரதமிருப்போர் மகாசிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டுமே உணவருந்தி சிவநாமம் ஜபித்துத் தயாராக வேண்டும். மகாசிவராத்திரியன்று அதிகாலையில் குளித்து, திருநீறு தரித்துக்கொண்டு, சிவாலயம் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும்.

பின்னர் எந்நேரமும் சிவ சிந்தனையுடன் தேவாரம், திருவாசகம் போன்ற திருமுறைகளைப் பாராயணம் செய்து இரவு முழுக்க கண்விழித்திருந்து நான்கு ஜாமங்களிலும் சிவ வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தகுந்த சிவாசாரியார்களை வைத்து வீட்டில் நான்கு கால பூஜைகளை செய்யலாம் அல்லது கோயிலுக்குச் சென்று பூஜைகளில் கலந்துகொள்ளலாம். விரதம் முடித்த மறுநாள் காலையில் நீராடி, சிவனடியார்களோடு சேர்ந்து உணவருந்தி மகாசிவராத்திரி விரதத்தினை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.


கூட்டம் அதிகமிருக்கிறதே, ஸ்வாமியை தரிசிக்க முடியவில்லையே என்பவர்கள் கவலைப்பட வேண்டாம். சிவனின் சந்நிதிக்கருகே அமர்ந்து ஐந்தெழுத்தை இரவு முழுக்க சொல்லிக்கொண்டிருந்தால்கூட போதும். ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும். கோயிலுக்குச் சென்று கூட்டத்தில் தரிசனம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே ருத்ராட்ச மாலையை கையில் வைத்து ஐந்தெழுத்தை ஓதலாம். சிவனின் படத்துக்கு வில்வத்தால் அர்ச்சித்து தெரிந்த பாடல்களைப் பாடி வழிபடலாம். நைவேத்தியமாக முடிந்ததை வைத்து வணங்கலாம்.

எளியோர்க்கு எளியோனான ஈசன், உங்கள் பூஜைகளில் இருக்கும் ஆடம்பரங்களை கவனிப்பதே இல்லை. உங்களின் மனத் தூய்மையையும், அர்ப்பணிப்பையும்தான் ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த சிவராத்திரி தினத்தில் கண்களும், உள்ளமும் ஒருசேர விழித்திருந்து ஆன்ம பலத்தினை பெருக்கிக்கொள்ளுங்கள். அது உங்களை ஆண்டவனோடு இணைத்துவிடும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!