இப்படி ஒரு ஆசிரியையா..? கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுத மாணவிகள்..!


இப்படி ஒரு துக்க வீட்டினை தமிழகம் இதற்கு முன்பு பார்த்திருக்காது. தங்கள் ஆசிரியை இறந்துவிட்டதை கேள்விப்பட்ட பள்ளி மாணவிகள் தரையில் அமர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கொண்டு கதறி அழுததையும் கண்டு அனைவரையும் கண்கலங்கி நின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பகுதி வத்திராயிருப்பு. இங்கு வசித்து வந்தவர் பிரேமசுந்தரி. இவர் கோட்டையூர் அரசு ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளியில் டீச்சராக பணியாற்றி வந்துள்ளார்.

பள்ளி மாணவிகள் யாராக இருந்தாலும் அவர்களோடு அன்பாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவராம் பிரேமசுந்தரி டீச்சர். அதனால் பிள்ளைகளுக்கு இவர் மேல் தனி பாசமே எப்போதும் உண்டாம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டீச்சருக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரை காப்பாற்ற முடியாத நிலையில் இன்று உயிரிழந்தார்.

டீச்சர் மறைந்த விஷயம் பள்ளி மாணவ, மாணவிகளின் காதில் எட்டியது… அதிர்ச்சியில் உறைந்த மாணவிகள், வகுப்பறையிலேயே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர். பள்ளியே ஒன்றுகூடி டீச்சர் வீட்டுக்கு திரண்டு வந்தது.

வீட்டினுள் கிடத்தப்பட்டிருந்த டீச்சரின் உடலை கண்டு மாணவ, மாணவிகள் கதறினார்கள். பிறகு வீட்டின் முன் தரையில் அமர்ந்து ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர். ஒரு பக்கம் மாணவர்கள், இன்னொரு பக்கம் மாணவிகள் என.. அந்த துக்க வீட்டில் உறவினர்களைவிட மாணவிகளே அதிகமாக கூடியிருந்தனர்.

தங்களுக்கு டீச்சருடன் ஏற்பட்ட ஒவ்வொரு சம்பவங்களையும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லி கொண்டு அழுதது அனைவரின் மனசையும் உருக்குவதாக இருந்தது. இதனால் மாணவர்களுக்கு எந்த ஆறுதலையும் யாராலும் சொல்ல முடியாமல் கண்கலங்கி நின்றனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!