பாபா எங்கே போய்விட்டார்? பக்தர்களின் திடமான நம்பிக்கையே சாய்பாபாவின் பூரண சக்தி..!


பாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணர வேண்டும். பாபா எங்கே போய்விட்டார்? பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரை விட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும். எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்! தாமோதர் ராசனேயிடம், என்னை எண்ணிய மாத்திரத்தில், நான் வந்து விடுகிறேன் என்றும், ஸ்ரீமதி தார்கட் அம்மையாரிடம் தாயே! நான் எங்கும் போகவில்லை.

என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன் என்றும், ‘ என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்’ என்றும் கூறிய நம் தேவனுக்கு வாரிசு என்றோ, அவருடைய மறு அவதாரமென்றோ யாராவது கூறிக் கொள்வது எங்ஙனம் தகும்? தம்முடைய வாரிசு என்று பாபா எவரையும் குறிப்பிடவில்லை.


பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது. கடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது.

அதைபோன்றே பாபாவின் பீடமும்! பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஆபாந்தராத்மாவாக பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார். யாருக்கு அனுக்ரஹம் அளிக்க விரும்புகிறானோ, அவனுடைய எல்லா உடைமைகளையும் கைபற்றிவிடுகிறேன் ‘ என்பதே பாபாவின் கொள்கை. இதைப் பலரால் புரிந்து கொள்ள முடியாது. இந்நிலையில் வைக்கப்பட்ட சாதகன் படிப்படியாக பாபாவைத் தவிர, தனக்கு வேறு கதி எதுவுமில்லை என்பதை உணர்ந்து, திடமான நம்பிக்கையும், விசுவாசத்தையும் பெற்றுவிடுகிறான். இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்ற சூன்ய நிலையே பரலோக சாதனத்திற்கு, அதாவது இறைவனைக் கண்டறிவதற்கு முதற்படி.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!