சீரடி சாய் பாபாவின் பக்தர்களுக்கு நேர்ந்த அதிசயம்..!


ஒருமுறை மருத்துவர் ஒருவருடன் ஷிர்டிக்கு வந்தார் ஒரு பாபா பக்தர். அந்த மருத்துவர் அதுவரை ஷிர்டி வந்ததில்லை. அவரோ தீவிர ராம பக்தர். ராமரைத் தவிர வேறு யாரையும் வழிபடுவதில்லை என்பதில் அவர் திட சித்தத்ததோடு இருந்தார். ஷிர்டிக்கு வர அந்த மருத்துவருக்கு விருப்பமே இல்லை. சாயி பக்தர் தான் அவரை வற்புறுத்தி அழைத்து வந்தார். ஆனால், சாயி பக்தர் அவரிடம், பாபாவை வணங்குமாறோ, அவரை நீங்கள் ஏற்க வேண்டும் என்றோ உங்களை யாரும் வற்புறுத்த மாட்டார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். நான் பாபாவைப் பார்க்கச் செல்லும்போது, நீங்களும் என் நண்பராக உடன் வருகிறீர்கள். இது என் நட்பைக் கவுரவிக்க நீங்கள் செய்யும் செயல். அவர் சொன்ன வாதம் சரியாகத்தான் இருந்தது. அவருடன், அந்த மருத்துவர் மசூதி நோக்கி நடந்தார்.

மசூதி நெருங்கியது. திடீரென தன்னுடன் வந்த பக்தரைத் தள்ளிவிட்டு, பாபாவை நோக்கி ஓடினார் அந்த மருத்துவர். காரணம், சாயி அமர்ந்திருந்த இடத்தில் புன்முறுவலுடன் அமர்ந்திருப்பது யார்? தசரத குமாரனான ராமன் அல்லவா? கையில் வில்லோடும், தலையில் ஒளிவீசும் மகுடத்தோடும், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போன்ற முகத்தோடு காட்சி தருகிறானே என் ராமன்? ராமா! எங்கெங்கோ உன்னைத் தேடினேன். கடைசியில் இங்கேயா இருக்கிறாய்? பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் நடந்த உன் பாதங்கள் நொந்திருக்குமே அப்பா? நான் பிடித்து விடவா? மருத்துவர் சடாரென்று பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டார். உன் பாதங்களில் சரணடைந்த என்னையும் காத்தருள் என் தெய்வமே….!


இப்படி நினைத்தவாறே நிமிர்ந்து பார்த்த மருத்துவர் திடுக்கிட்டார். சடாரென்று தன் கைகளை உதறினார். அங்கே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தது பாபா தான். ராமனல்ல. அப்படியானால் சற்றுமுன் கண்ட காட்சி பொய்யா? மருத்துவருக்குத் தலை சுற்றியது. எதுவும் பேசாமல் விறுவிறுவென்று தான் தங்கியிருந்த இடம் நோக்கிச் சென்றார். பாபா ராமனாக உருமாறியது உண்மையா.. இல்லை பிரமையா? இதன் சூட்சுமத்தை பாபாவே அறிவிக்கட்டும். அதுவரை தான் உணவு உண்ணப் போவதில்லை. திடசித்தத்தோடு ஒரு முடிவெடுத்த மருத்துவர் எதையும் சாப்பிடாமல் விரதமிருக்கலானார்.

நான்காம் நாள் அதிகாலை அவரைத் தேடி வந்தார், ஷிர்டி அருகே கான்தேஷ் என்னும் கிராமத்தில் வசிக்கும் அவரின் நண்பர். அவர் இதுவரை பாபாவை தரிசித்ததில்லை. பாபாவை தரிசிக்க விரும்பிய அவர், மசூதிக்கு வாருங்கள் என்று மருத்துவரைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தார். அவர் வற்புறுத்தலால் அவருடன் மசூதி நோக்கி நடந்தார் மருத்துவர். ராமரும் பாபாவும் ஒன்றுதானா? விடை கிடைக்கும் வரை தன் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டியதுதான். மருத்துவர் நண்பரோடு மசூதிக்குள் நுழைந்தார்.


மருத்துவரின் நண்பரைப் பார்த்த பாபா, கான்தேஷில் இருந்து வருகிறீர்களே, கான்தேஷில் எல்லோரும் நலமா? என்று அக்கறையோடு விசாரித்தார்! நண்பரும் மருத்துவரும் வியப்போடு பாபாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாபா மருத்துவரிடம் பேசலானார்: இப்படிப் பிடிவாதம் பிடித்தால் எப்படி? கடைசியில் உன்னை அழைத்துவர கான்தேஷிலிருந்து ஒருவர் வர வேண்டிஇருக்கிறது! நீயே மருத்துவன். உடலுக்குச் சாப்பாடு எவ்வளவு முக்கியம் என்று உனக்குத் தெரியாதா? தான் உண்ணாவிரதம் இருக்கும் விஷயம் பாபாவுக்கு எப்படித் தெரிந்தது? வியப்போடு பாபாவை நிமிர்ந்து பார்த்தார் மருத்துவர். அவரை நோக்கிப் பரிவோடு புன்முறுவல் பூத்தது – பாபாவின் முகமல்ல, ராமனின் திருமுகம்!

பாபாவைப் பற்றிய சந்தேக நோயால் பீடிக்கப்பட்டிருந்த மருத்துவரின் மனம், அன்று முழு ஆரோக்கியம் அடைந்தது. அன்று தொட்டு அவர் பாபா பக்தரானார். பாபாவைத் தேடிவருபவர்களில், வியாதி குணமாக வேண்டும் என்னும் கோரிக்கையோடு வருபவர்களின் எண்ணிக்கையே அதிகம். பலதரப்பட்ட மருந்துகளை சாப்பிட்டும், குணமாகாத வியாதிகள் பாபாவின் தரிசனத்தால் குணமாவதை பக்தர்கள் அறிந்திருந்தார்கள். பூட்டி என்பவருக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்கள் நேர்ந்தன. ஒன்று கடுமையான வயிற்றுப் போக்கு. இன்னொன்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாந்தி. எல்லா மருத்துவர்களும் கைவிரித்து விட்டார்கள். அவருக்கு பாபா மேல் அளவற்ற பக்தி உண்டு. ஆனால், நேரில் சென்று பாபாவைத் தரிசிக்கும் அளவு அவர் உடலில் தெம்பில்லை.


பாபா எவ்விதமேனும் அவரை அழைத்து வருமாறு, ஓர் அடியவரை அனுப்பினார். அவரைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு பூட்டி, மசூதிக்கு வந்துசேர்ந்தார். பாபா! என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கதறினார். பூட்டியையே உற்றுப் பார்த்த பாபா, உன் வயிற்றுப் போக்கு, வாந்தி இரண்டுமே உடனடியாக நிற்க வேண்டும், இது என் ஆணை, தெரிந்ததா? என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார். பாபாவின் வார்த்தைகளுக்கு மந்திர சக்தி உண்டல்லவா? அடுத்த கணமே அவரது நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பாபாவின் திருவடிகளைப் பணிந்த அவர், கம்பீரமாக நடந்து இல்லம் திரும்பினார். பாபாவுக்கு கண்பத் என்றொரு பக்தர் உண்டு. அவர் கொடிய வகைப்பட்ட மலேரியாவால் கஷ்டப்பட்டார். பாபாவைச் சரணடைந்தார். அவரை உற்றுப் பார்த்த பாபா, முன்வினையால் தான் அந்த நோய் அவரைத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

அந்த நோய்க்கு பாபா சொன்ன வைத்தியம் யாரும் எதிர்பாராதது. கொஞ்சம் சோறை எடுத்துத் தயிரோடு கலந்துகொள்! என்றார். அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். உடனே பாபா சொன்னபடியே, தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று, பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!