சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொள்ளமாட்டேன்! – ஸ்டாலினை கலாய்த்த கமல்..!


“சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக்கொண்டுதான் வெளியில் வருவேன்” என்று கமல் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் பள்ளியில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது பேசிய அவர், “நான் வித்தியாசமான விநோதமான அரசியல்வாதி, அரசியலில் எதுவும் சரியில்லை அதை சரிசெய்ய வேண்டும், தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் மாணவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று என்பது தவறான கருத்து. மாணவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தேவையான ஒன்று. சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தால் கலவரங்கள் குறைந்துவிடும். ஐந்து வருடத்தில் அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதைப் பாருங்கள்.

ஓட்டுப் போடும்போது சிறிது யோசித்து போடுங்கள். நான்கு படம் நடிக்க வேண்டிய இடத்தில் ஒரு படம் நடிக்கிறேன். சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும், நல்ல சட்டை போட்டுக்கொண்டுதான் வெளியில் வருவேன். தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை; கொஞ்சவும் இல்லை.


ரத்தம் வந்தால் அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும், உடனடியாக அறுவை சிகிச்சைக்காக செல்ல முடியாது. 44 பேர் இறந்துள்ளனர். உங்களது பெற்றோர் உங்களை ராணுவத்துக்குச் செல்ல வேண்டாம் என்றால், அவர்களிடம் சொல்லுங்கள், ராணுவத்தில் உயிரிழப்பவர்களைவிட தமிழகத்தில் சாலை விபத்தில் உயிர் இழப்பவர்கள்தான் அதிகம் என்று.

ராணுவ வீரர்கள் இறப்பதற்குதான் ராணுவத்துக்கு வருகிறார்கள் என்கிறார்கள். ராணுவ வீரர்கள் சாக வேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டு நாட்டின் தலைவர்களும் அமர்ந்து பேசினால், ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டியதில்லை. இந்த ஒரு வருடத்தில் எதை எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொண்டேன். பொதுஅறிவு கூட இல்லாதவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.

கூட்டணி என்னும் கறுப்புக்குட்டைக்குள் எனது புது காலணியை அழுக்காக்க விரும்பவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும். கட்சியைத் தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று சொல்வது முறையல்ல. கிராம சபைக் கூட்டம் என்று இருப்பது உங்களுக்குத் தெரியாதா. நேற்று வந்த பையனைப் பார்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா?’’ என்றார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!