சிறைப்பறவைக்கு போயஸ்கார்டனில் தயாராகப்போகும் கூடு…!


சொன்னா நம்பமாட்டீங்க, ஆனாலும் எங்களால சொல்லாமலும் இருக்க முடியாது. யெஸ், சசிகலா குடியிருக்க சென்னையில் இப்போது அவருக்கே அவருக்குன்னு சொந்தமா ஒத்த வீடு கூட கிடையாது. அதனால புது வீடு கட்ட தயாராகிவிட்டார் சசி….

இந்த தமிழ்நாட்டையே தன் வீடாக நினைத்து பேரரசியின் தோழி அரசியாக வலம் வந்தவர் சசிகலா. ஜெயலலிதா இருந்த காலத்தில், அதுவும் அரியணையில் அமர்ந்திருந்த காலத்தில் சசியின் சுற்றமும் சொந்தமும் வாங்கிக் குவித்த சொத்துக்களைப் பற்றி விரல் அல்ல மணல் விட்டு கூட எண்ணிட முடியாது என்பார்கள். அம்பூட்டு சொத்துக்களுக்கு சொந்தக்கார ஆலமரத்தின் ஆணி வேர்தான் சசிகலா.

ஜெயலலிதா இருந்த வரையில் அவரோடு போயஸ் கார்டன் வேதநிலையத்திலும், கோடநாடு சென்றால் அங்கிருக்கும் எஸ்டேட் பங்களாவிலும், சிறுதாவூர் அல்லது ஐதராபாத் திராட்சை தோட்டம் சென்றால் அங்கிருக்கும் பங்களாவிலுமாக வசிப்பார்கள். ஆனால் ஜெ., மரணத்துக்குப் பின் கொடநாடு பங்களாவோ சொத்துக் குவிப்பு வழக்கில் அட்டாச் செய்யப்பட்டுள்ளது, போயஸ் வீடோ வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அதை மீட்டாலும் கூட ‘அம்மாவின் நினைவிடமாக்குவோம்’ என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறது அரசுத்தரப்பு.


இப்படியாக ஒவ்வொன்றாக பார்க்கப்போனால் சசிக்கென்று எந்த சொந்தவீடும் தலைநகரில் இல்லை. பரோலில் வந்தாலும் கூட இளவரசியின் மகன் விவேக்கின் வீட்டிலோ, கிருஷ்ண பிரியாவின் வீட்டிலோ தங்க வேண்டிய நிலை. இதனால், சசிகலா தனக்காக சொந்த வீடு கட்டிக் கொள்ள தயாராகிவிட்டார்.

சிறையிலிருந்து ரிலீஸாகி வெளியே வந்த பின், அமர்ந்து அரசியல் செய்ய தனக்கென ஒரு வீட்டை தயார் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார். போயஸ்கார்டனில் சசி பெயரில் ஒரு இடம் இருப்பதாகவும், அங்கேயே வீடு கட்ட இருக்கிறார் என்றும் தகவல்.

சிறையிலிருக்கும் சசிக்காக கூடிய விரைவில் போயஸில் உள்ள அந்த இடத்தில் அஸ்திவார பூஜை போடப்பட்டு வேலை துவங்கும்! என்கிறார்கள்.

சசிக்கு போயஸில் வீடு தயாராகி அவர் மீண்டும் ஆக்டீவ் அரசியலுக்கு அதிரிபுதிரியாக வந்துவிட்டால், கொஞ்ச காலம் இழந்திருந்த அரசியல் பரபரப்பு கெளரவத்தை மீண்டும் பெற்றுவிடும் போயஸ் தோட்டம்.

நடக்குமா இது?! என்பது ஒருபுறமிருக்க, சசியை நன்கு அறிந்த சிலரோ ‘சசி சென்னையில் வீடு கட்டும் முடிவில் இருக்கிறார்தான். ஆனால் அது போயஸில் இல்லை.’ என்கிறார்கள்.

பார்க்கத்தானே போறோம்.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!