பிளாட்பாரத்தில் துடிதுடிக்க கொல்லப்பட்ட இளைஞன் – 6 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி..!


சென்னை பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஆங்கிலோ இந்தியன் வாலிபரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த 6 மணி நேரத்தில் சிசிடிவி கேமரா உதவியால் கொலையாளியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரம்பூர், பாக்சன் தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் செம்பியம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்றார். சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் யார் என்று போலீஸார் விசாரித்தபோது அவரின் பெயர் ப்ரெயின் க்ளாக் (49) என்று தெரியவந்தது.

மேலும் அவர், ஆங்கிலோ இந்தியன் என்ற தகவலும் கிடைத்தது. அவரை கொலை செய்தவர் யார் என்பதைக் கண்டறிய அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். கேமராவில் ப்ரெயின் க்ளாக் தலையில் ஒருவர் கல்லைத் தூக்கிப்போடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர் யார் என்று போலீஸார் விசாரித்தபோது அவரும் பிளாட்பாரத்தில் தங்கியிருப்பவர் என்று தெரியவந்தது.

இதனால் அவரை போலீஸார் தேடினர். பிளாட்பாரத்தில் நடந்த கொலையைக் கண்டறிய கூடுதல் கமிஷனர் தினகரன் உத்தரவிட்டார். அதன்பேரில் இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் (பொறுப்பு) பரந்தாமன், உதவி கமிஷனர் அரிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீஸ் டீம், கொலையாளியின் புகைப்படத்துடன் ஒவ்வொரு பிளாட்பாரமாகத் தேடினர். கொலை நடந்த 6 மணி நேரத்தில் ப்ரெயின் கிளாக்கை கொலை செய்த சேகரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஆங்கிலோ இந்தியனான ப்ரெயின் கிளாக்கின் குடும்பம் வசதியானது. இவருக்கு உறவினர்கள் உள்ளனர். படிப்பை முடித்த ப்ரெயின் கிளாக், தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துள்ளார். போதை பழக்கத்துக்கு அடிமையான ப்ரெயின் கிளாக்கின் வாழ்க்கை திசைமாறத் தொடங்கியது. குடி பழக்கம் காரணமாகச் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரின் வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியேறிய அவர், மனம்போல வாழ்ந்துள்ளார்.

ப்ரெயின் கிளாக் மீதுள்ள பாசம் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள அவரின் சகோதரர் ஒருவர், உதவி செய்துள்ளார். ப்ரெயின் கிளாக்குக்குத் தேவையான பண உதவிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல் பெரம்பூர் பகுதியிலேயே வாடகைக்கு வீட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்த பணத்தையும் ப்ரெயின் கிளாக் மது குடிக்க அதிகளவில் செலவழித்துள்ளார். இதனால் சகோதரர் அனுப்பும் பணம் ப்ரெயின் கிளாக்குக்குப் போதவில்லை. இதனால் வாடகைக்குக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வாங்கி செலவழித்துள்ளார்.


தன்காரணமாக வாடகை வீட்டிலிருந்து அவர் வெளியேறி பெரம்பூர் பாக்சன் தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் சில மாதங்களாகத் தங்கியிருந்துள்ளார். அவரின் இந்தப் பரிதாப நிலைமையை மற்ற உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை. வசதியாக வாழ்ந்த ப்ரெயின் கிளாக்கின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. பிளாட்பாரத்தில் தங்கியிருந்தவர்களின் நட்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அதுதான் உலகம் என்று ப்ரெயின் கிளாக் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிளாட்பாரத்திலேயே வாழ்ந்துவந்துள்ளார்.

இந்தச் சமயத்தில்தான் பெரம்பூர், அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சேகரின் (46) அறிமுகம் ப்ரெயின் கிளாக்குக்குக் கிடைத்துள்ளது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். சில தினங்களுக்கு முன், குவாட்டர் வாங்கித் தரும்படி ப்ரெயின் கிளாக்கிடம் சேகர் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று குவாட்டர் வாங்கித் தராத ஆத்திரத்தில் இருந்த சேகர், ப்ரெயின் கிளாக்கிடம் தகராறு செய்துள்ளார். `நான் படுக்கும் இடத்தில் நீ எப்படிப் படுக்கலாம்’ என்று கேட்டுள்ளார். இதனால் இருவரும் இரவில் சண்டை போட்டுள்ளனர். பிறகு, ப்ரெயின் கிளாக் பிளாட்பாரத்தில் படுத்துறங்கியுள்ளார். அப்போது அவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் சேகர். ரத்தவெள்ளத்தில் மிதந்த ப்ரெயின் கிளாக் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவரின் தலையில் போடப்பட்ட கல்லில் ப்ரெயின் கிளாக்கின் தலைமுடி ஒட்டியுள்ளது. அந்தக் கல்லை ஆதாரமாகக் கைப்பற்றி சேகரைத் தேடினோம். அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த சேகரை நாங்கள் மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தக் கொலை சம்பவத்தை துப்பு துலக்க எங்களுக்கு உறுதுணையாக இருந்தது சிசிடிவி கேமராதான். சமீபத்தில் இந்தப் பகுதியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில்தான் நாங்கள் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினோம். கொலை சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால் 6 மணி நேரத்தில் கொலையாளியைக் கைது செய்ய முடிந்தது. இல்லையென்றால் கொலை செய்தவரைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கும். ஏனெனில், கொலை செய்தவரும் பிளாட்பாரத்தில்தான் தங்கியுள்ளார். பெரம்பூரில் கொலை செய்த சேகர், சென்னையில் வேறு எங்கு சென்றிருந்தாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும்’’ என்றார்.

சேகரிடம் போலீஸார் விசாரித்தபோது, குவாட்டர் வாங்கித் தரவில்லை. அதனால் கொலை செய்துவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் 302 ஐ.பி.சி பிரிவின் கீழ் சேகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ப்ரெயின் கிளாக் கொலை செய்யப்பட்ட தகவல் அவரின் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது சில உறவினர்கள் ப்ரெயின் கிளாக்கின் சடலத்தைப் பெற விரும்பவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள அவரின் சகோதரருக்குப் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர், இந்த வார இறுதிக்குள் சென்னை வந்து ப்ரெயின் கிளாக்கின் சடலத்தைப் பெறுவதாகப் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். வசதியாக வாழ்ந்த ப்ரெயின் கிளாக்கின் வாழ்க்கை, குடி மற்றும் தவறான நட்பால் திசைமாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். துரிதமாகச் செயல்பட்டு கொலையாளியைக் கண்டறிந்த போலீஸாருக்குப் பாராட்டும் பரிசும் இன்று வழங்கப்பட்டது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!