நெஞ்சுவலியால் துடிதுடித்து மயங்கி விழுந்த எஜமான்! – காப்பாற்றிய வளர்ப்பு நாய்..!


வளர்ப்புப் பிராணிகள் எப்போதும், வளர்ப்பவர்களின் பாசத்துக்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கும். பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும், நாய்க்கு இருக்கும் மதிப்பே தனி. மற்ற பிராணிகளைவிட மனிதனின் நம்பிக்கைக்கு உரிய உயிரினமாகவே நாய் இருந்துவருகிறது. நாய் நன்றியுள்ளது என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில், பிரௌனி என்கிற நாய் நெகிழவைத்துள்ளது. புனேவைச் சேர்ந்த 60 வயது டாக்டர் ரமேஷ் சன்சேத்தி வளர்த்துவரும் நாய்தான் பிரௌனி.

இதற்கிடையே, கடந்த 23-ம் தேதி மதியம், ரமேஷின் பக்கத்து வீட்டுக்காரர் அமித் ஷா, பிரௌனிக்கு உணவு வைத்துள்ளார். ஆனால் அவர் அளித்த உணவை உண்ண மறுத்தது. தனது ஓனரான ரமேஷின் ரூமுக்கு இரண்டு மூன்று தடவை சென்றுவந்துள்ளது. பிரௌனியின் நடவடிக்கையைக் கவனித்த அமித் ஷா, ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து, ரமேஷின் ரூம் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த ரூமில், ரமேஷ் சுருண்டு விழுந்துகிடந்துள்ளார். உடனடியாக ரூமின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், நெஞ்சுவலியால் ரமேஷ் விழுந்துகிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இப்போது, ரமேஷ் நலமாக இருக்கிறார். ரமேஷின் மனைவி மும்பையிலும், அவரது மகள் அமெரிக்காவிலும் வசித்துவருகின்றனர். இதனால் ரமேஷும் பிரௌனியும் மட்டுமே அந்த வீட்டில் உள்ளனர்.

இந்த விஷயம் வெளியில் தெரிய, தக்க சமயத்தில் தனது ஓனரின் நிலையை அறிந்து அவரைக் காப்பாற்றிய பிரௌனிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. பிரௌனி குறித்து அமித் ஷா கூறுகையில், “பிரௌனி மிகுந்த சிரமத்துடன் ரமேஷின் ஜன்னல்மீது கால் வைத்துக் காட்டியது. முதலில் அதைப் பார்க்கையில் நான் மிகவும் குழப்பமடைந்தேன். உள்ளே எட்டிப் பார்க்கும்போதுதான் ரமேஷ் உள்ளே விழுந்துகிடந்ததைத் தெரிந்துகொண்டேன். அதன்பிறகு, உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தேன்” எனக் கூறியுள்ளார்.

பிரௌனியை ரமேஷ் 16 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக வாங்கியுள்ளார். அப்போது இருந்து அவருடன் பிரௌனி வளர்ந்துவருகிறது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!