40 எம்பி, 3 லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன் விரைவில் களமிறங்குகிறது…!


ஸ்மார்ட்போன் சந்தையில் தற்சமயம் வெளியாகும் சாதனங்களின் கேமரா அம்சம் முன்பை விட அதிகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஆப்பிள் ஐபோன்களுக்கு சவால் விடும் வகையிலும், அவற்றை மிஞ்சும் வகையிலும் சாம்சங், கூகுள் மற்றும் ஹவாய் போன்ற நிறுவனங்கள் தங்களது சாதனங்களில் தலைசிறந்த கேமராக்களை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டரில் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அதில் ஹூவாய் நிறுவனம் ‘PCE’ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருப்பதாகவும், இவை அழகிய புகைப்படங்களை எடுக்க ஏதுவான கேமரா லென்ஸ் மற்றும் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

புதிய ‘PCE’ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 40 எம்பி, டிரிப்பிள் லென்ஸ் (5X-ஹைப்ரிட் சூம்) கேமரா மாட்யூல் மற்றும் 24 எம்பி செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.


ஹூவாய் ‘PCE’ ஸ்மார்ட்போன்களின் கேமராவை ஜெர்மன் நாட்டு கேமரா நிறுவனமான லெய்கா இணைந்து தயாரிக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக ஹூவாய் வெளியிட்ட P10 மற்றும் ஹூவாய் மேட் 10 ஸ்மார்ட்போன்களின் கேமராவினை லெய்கா நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் எவான் பிளாஸ் பதிவிட்டுள்ள விளம்பரங்களில் புதிய ஸ்மார்ட்போன் கேமராக்களில் ப்ரோ நைட் மோட் மற்றும் ப்ரோ AI அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதால் இந்த அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் வெளியாகுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

மூன்று கேமரா மாட்யூல் வழங்கப்படும் பட்சத்தில் இந்த அம்சம் வழங்கும் முதல் நிறுவனமாக ஹூவாய் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெய்கா நிறுவனத்துடன் இணைந்து கேமரா வழங்கப்படும் என்ற தகவல் ஹூவாய் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக ஹூவாய் மற்றும் லெய்கா நிறுவனங்கள் இணைந்து ஹூவாய் P9 ஸ்மார்ட்போனினை வெளியிட்டன. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!