“எனக்குப் பயமாக இருக்கிறது அப்பா” – மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்..!


அர்ஜென்டினா அணியின் பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சாலா பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது.அர்ஜென்டினா அணியின் பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சாலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, இங்கிலாந்து வேல்ஸின் கார்டிப் கிளப் அணி 138 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.

கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த சனிக்கிழமை கையெழுத்திட்ட அவர், கடந்த திங்கள்கிழமை மாலை இரண்டு பேர் பயணம் செய்யும் சிறிய ரக விமானத்தின் மூலம் பிரான்சில் இருந்து வேல்ஸுக்குத் திரும்பினார். அன்றுதான் இவரை இந்த உலகம் கடைசியாகப் பார்த்தது. அவர் பயணம் செய்த விமானம் சானல் தீவு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. அதன் பிறகு அந்த விமானத்தில் இருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதா, யாரும் கடத்திச் சென்றார்களா, விமானம் விபத்துக்குள்ளானதா, அதில் பயணம் செய்தவர்களின் நிலைமை என்ன என்பது குறித்த எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. விமானம் மாயமான தகவல் வெளியானதும் எமிலியானோ ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, விமான பயணத்தின்போது சக வீரர்களுக்கும் தனது தந்தைக்கும் எமிலியானோ வாட்ஸ்அப் மூலம் ஆடியோவாக மூன்று எஸ்.எம்.எஸ்களை அனுப்பியதாக அர்ஜென்டினா நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முதல் எஸ்.எம்.எஸில் அணி வீரர்களுடன் பயிற்சி குறித்துப் பேசிய அவர், இரண்டாவது எஸ்எம்எஸில், “நான் விமானத்தில் இருக்கிறேன். இப்போது கார்டிப் சென்று கொண்டிருக்கிறேன்.

இந்த விமானம் விழுவதுபோல் தெரிகிறது. எனினும் நாளை புதிய அணியுடன் பயிற்சியைத் தொடங்கவுள்ளேன்” என்று கூறியிருக்கிறார். மூன்றாவது எஸ்.எம்.எஸில், “ஒரு மணி நேரத்தில் என்னிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை என்றால், இனிமேல் என்னைப் பற்றிய தகவல் ஏதும் வெளியாக வாய்ப்பில்லை. காப்பாற்ற எவரையேனும் அவர்கள் அனுப்புவார்களா எனவும் தெரியவில்லை. எனக்குப் பயமாக இருக்கிறது” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.- Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!