சீரடி சாய்பாபா புகழ் பரப்பிய நரசிம்ம சுவாமிஜி..!


சீரடி சாய்பாபாவின் புகழ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. குட்டி நாடுகளில் கூட பாபாவின் அற்புதங்கள் பேசப்படுகிறது.

சமீபத்திய கணக்கெடுப்புப்படி உலகம் முழுவதும் சாய்பாபாவுக்கு லட்சக்கணக்கான ஆலயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் பல நகரங்களில் பாபாவுக்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த கோவில்களில் அடிக்கடி பாபா அற்புதங்கள் நிகழ்த்துகிறார். இந்தியாவில் பாபா ஆலயம் ஊருக்கு ஊர் தோன்றி வருகிறது. சீரடி தலத்தில் சாய்பாபாவுக்கு எப்படி ஆரத்தி செய்யப்படுகிறதோ, எப்படி நைவேத்தியம் படைக்கப்படுகிறதோ, அதே மாதிரி இந்த ஆலயங்களில் எல்லாம் ஆரத்தி உள்ளிட்ட பூஜை முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

வியாழக்கிழமைகளில் சீரடியில் நடப்பது போல பாபா பட ஊர்வலம் நடத்தப்படுவது அனைத்து ஆலயங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. உலக அளவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், சாய்பாபாவுக்கு கட்டப்பட்டுள்ளது போல லட்சக்கணக்கான ஆலயங்கள் இதுவரை எந்த இறை அவதாரத்துக்கும் குறுகிய காலத்தில் கட்டப்பட்டதில்லை என்று தெரியவந்துள்ளது. ஆலய வழிபாட்டில் இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகிறது. பாபாவின் சிறப்பு இப்படி நாடெங்கும் ஒருங்கே பரவி இருப்பதற்கு நரசிம்ம சுவாமி செய்த பிரசாரமே அடித்தளமாக அமைந்தது.

ஈரோடு அருகே பவானியில் 1874-ம் ஆண்டு வெங்கடகிரி அய்யர்-அங்கச்சி அம்மாள் தம்பதியரின் மகனாக நரசிம்ம சுவாமி பிறந்தார். சென்னையில் சட்டம் படித்த அவர் 1895-ம் ஆண்டு சேலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியத் தொடங்கினார். பேச்சாற்றல் காரணமாக அவர் புகழ் பரவியது. 1912-ம் ஆண்டு அவர் சென்னை மாகாண சட்டசபை மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவையில் தமிழில் பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்.

1920-ம் ஆண்டு அப்பதவியில் இருந்து விலகிய அவர் நாட்டுப் பற்று மற்றும் மொழிப் பற்றுடன் திகழ்ந்தார். மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்திலும் சேர்ந்து பணியாற்றினார். இந்த நிலையில் 1921-ம் ஆண்டு அவர் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டது. அவரது மகனும் மகளும் வீட்டில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்தனர். இது அவர் மனதை மிகவும் பாதித்தது.

ஏன் இவ்வாறு நடந்தது? நான் என்ன பாவம் செய்தேன்? என்று யோசித்தார். விடை கிடைக்கவில்லை. மனஅமைதி இல்லாமல் தவித்தார். நல்ல குரு ஒருவர் கிடைத்தால்தான் தனது இந்த நிலைக்கு தீர்வு தெரியும் என்று நம்பினார். விரக்தியின் விளிம்பில் நின்ற அவர் சொத்து, சுகம் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு துறவு வாழ்வுக்கு மாறினார். இதனால் அவர் நரசிம்ம சுவாமிஜி என்று அழைக்கப்பட்டார்.

முதலில் அவர் திருவண்ணாமலைக்கு சென்று ரமணர் ஆசிரமத்தில் தங்கினார். மூன்றாண்டுகள் அங்கு இருந்தார். ஆனாலும் அவருக்கு மன அமைதி ஏற்படவில்லை. எனவே வடநாடு பயணம் மேற்கொண்டார். பல மகான்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ஒருவர் சீரடிக்கு சென்று பாருங்கள். ஒரு வேளை நீங்கள் தேடும் குரு அங்கு இருக்கலாம் என்றார். அப்போது பாபா மகாசமாதி ஆகி சுமார் 15 ஆண்டுகள் ஆகியிருந்தது. சீரடி செல்லும் வழியில் உபாசினியை சந்தித்தார். அவருடன் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்.

உபாசினிதான் சீரடியில் உள்ள பாபா சமாதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன் பேரில் 1936-ம் ஆண்டு சீரடிக்கு நரசிம்ம சுவாமிஜி வந்து சேர்ந்தார். பாபா சமாதி முன்பு போய் நின்றார். அவர் மனம் இதுவரை இல்லாத அமைதியைப் பெற்றது.

மனதுக்குள் இனம் புரியாத சாந்தமான உணர்வு பரவியது. பாபா தம்மிடம் மவுன மொழியில் பேசுவது போன்று நரசிம்ம சுவாமிஜி உணர்ந்தார். அப்போதே, ‘‘இதுநாள் வரை நாம் தேடிய குரு இவர்தான்’’ என்று நரசிம்ம சுவாமிஜியின் மனம் சொல்லியது. அவர் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.

பாபா பற்றிய அனைத்து தகவல்களையும் உலகம் முழுக்க உள்ளவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று அவர் மனதில் தீர்மானித்தார். பாபாவிடம் நெருங்கிப் பழகியவர்கள், பக்தர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசினார். பக்தர்களின் அனுபவங்கள் அனைத்தையும் கட்டுரைகளாகத் தொகுத்தார்.

மராட்டிய மாநில கிராமங்களில் கதாகாலட்சேபங்கள் நடத்தி சாய்பாபாவின் புகழை தாஸ்கணு மகாராஜ் பரப்பி வந்தார். அவர் பாபா நிகழ்த்திய அற்புதங்களை எல்லாம் துல்லியமாக நரசிம்ம சுவாமிஜியிடம் கூறினார். அது போல மகல்சாபதி, சந்தோர்கர், பட்டீல் குடும்பத்தினரும் பாபா பற்றிய தகவல்களை தெரிவித்தனர். பாபாவிடம் உதவியாளர்களாக இருந்த அப்துல் மற்றும் ரெகே இருவரும் பாபாவின் தினசரி நடவடிக்கைகள் பற்றிய அரிய தகவல்களை கொடுத்து உதவினார்கள்.

இந்த தகவல்கள், அற்புதங்கள் அனைத்தையும் ‘‘சண்டே டைம்ஸ்’’ பத்திரிகையில் நரசிம்ம சுவாமிஜி உரிய ஆதாரங்களுடன் தொடர் கட்டுரைகளாக எழுதினார். 1936 மற்றும் 1937-ம் ஆண்டுகளில் அந்த கட்டுரைகள் வாரந்தோறும் வெளியானது. இதனால் சீரடி சாய்பாபா புகழ் இந்தியா முழுவதும் பெருகியது.

சீரடிக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் தொடர்ந்து நடந்ததால் பக்தர்கள் வருகை மேலும் உயர்ந்தது. இந்த நிலையில் பாபா புகழை உலகம் முழுக்க பரப்ப வேண்டும் என்று நரசிம்ம சுவாமிஜி ஆசைப்பட்டார். அந்த எண்ணத்துடன் ஆழ்தியானத்தில் ஈடுபட்டார். தியானத்தில் இருந்து விடுபட்ட போது அவர் அருகில் ஒரு பை இருந்தது.


யாரோ ஒரு நபர் அவசரம், அவசரமாக வந்து அந்த பையை வைத்து விட்டுச் சென்றதாக கூறினார்கள். நரசிம்ம சுவாமிஜி அந்த பையைத் திறந்து பார்த்தார். உள்ளே கத்தை, கத்தையாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதுவும் பாபாவின் அற்புதமே என்று உணர்ந்த நரசிம்ம சுவாமிஜி அந்த பணத்தை எல்லாம் பாபாவின் புகழ் பரப்பும் பணிகளுக்கு செலவிட்டார்.

1939-ம் ஆண்டு சென்னை திரும்பிய அவர் மைலாப்பூரில் ‘‘அகில இந்திய சாய் சமாஜம்’’ எனும் அமைப்பை தொடங்கினார். பாபா பற்றிய சிறு சிறு நூல்களை ஏராளமாக எழுதி வெளியிட்டார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாபா பற்றிய அற்புதங்களை மக்கள் மத்தியில் பேசினார்.

1940-ம் ஆண்டு ‘‘சாய் சுதா எனும் பத்திரிகையை தொடங்கி அதில் பாபா பற்றிய’’ கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். சாய்பாபாவை எப்படி வழிபட வேண்டும்? எப்படி நைவேத்தியம் செய்ய வேண்டும்? ஆரத்தி எப்படி செய்ய வேண்டும்? என்றெல்லாம் மக்களுக்கு விளக்கம் அளித்தார். இதனால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பாபாவின் புகழ் மிக வேகமாக பரவியது.

நரசிம்ம சுவாமிஜியின் இத்தகைய சீரிய தொண்டு காரணமாக பல ஊர்களில் பாபாவுக்கு ஆலயங்கள் தோன்றின. மைலாப்பூரிலும் பாபாவுக்காக நரசிம்ம சுவாமிஜி அழகான ஆலயம் கட்டினார். சீரடியில் உள்ளது போன்ற கோபுர அமைப்புடன் அந்த ஆலயம் கட்டப்பட்டது. 1953-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே ஆயிரம் பக்கங்கள் கொண்ட ‘‘சாய்பாபாவின் சரித்திரம்’’ என்ற புத்தகத்தையும் அவர் எழுதி வெளியிட்டார். ஆங்கிலத்தில் 4 பாகங்களாக எழுதப்பட்ட அந்த நூல் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்தது. நிறைய பேர் சாய் மார்க்கத்துக்கு வர இந்த நூல் வழி வகுத்தது.

பாபாவுக்காக இப்படி ஓயாது உழைத்த நரசிம்ம சுவாமிஜி 1956-ம் ஆண்டு தனது 83-வது வயதில் சாய்பாபாவின் திருவடி நிழலில் சேர்ந்தார். சாய்பாபா மீது உண்மையிலே அன்பும், பற்றும் கொண்ட ஒவ்வொரு பக்தரும், ஏதாவது ஒரு வகையில் தம்மால் இயன்ற முறையில் பாபா பற்றிய பிரசாரத்தை செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர் நம்மிடம் பதிய வைத்து சென்றுள்ளார். எனவே சாய்பாபாவின் சிறப்பை பரவச் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

அதற்கு நாம் பாபாவிடம் சரண் அடைய வேண்டும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!