“புட்டியின் வாடாவினுள் நான் நிரந்தரமாகத் தங்கி பக்தர்களைக் காப்பேன்”


இறை அவதாரமாக இந்த உலகிற்கு வருபவர்கள், ஏதோ ஒரு இலக்குடன்தான் வருவார்கள். அந்த இலக்கும், சேவையும் முடிந்து விட்டால், அப்புறம் ஒரு நிமிடம் கூட இந்த உலகில் தங்க மாட்டார்கள்.

“வந்த வேலை முடிந்தது” என்று விடை பெற்று, அடுத்தக்கட்ட பயணத்தை தொடர புறப்பட்டு விடுவார்கள். கோடிக்கணக்கான மக்களின் கண்கண்ட தெய்வமான சீரடி சாய்பாபாவும் அப்படிதான் 1918 அக்டோபர் 15-ல் தனது மூச்சை நிறுத்தி இருந்தார்.

பாபாவின் உடலை எவ்வாறு அடக்கம் செய்வது என்பதில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும், தங்கள் மத கோட்பாடுகள் அடிப்படையில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர்.

சீரடி கிராம அதிகாரியாக இருந்த ராமச்சந்திர பாடீல் அதை ஏற்கவில்லை. கோபால் ராவ் புட்டி கட்டிவரும் தகடி வாடாவில் (தகடி என்றால் கல். வாடா என்றால் கட்டிடம்). அதாவது கல் கட்டிடத்தில் பாபா உடலை அடக்கம் செய்யலாம் என்று கூறினார்.

சீரடி மக்களிடம் நிலவிய இந்த கருத்து வேறுபாட்டால் ஒருமித்த கருத்து உருவாவதில் இழுபறி நீடித்தது. அன்றிரவு முழுவதும் அப்படியே கழிந்து விட்டது. பாபா உடல் அப்படியே உட்கார்ந்த நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது.


மறுநாள் காலை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி படேபாபா என்பவர் தலைமையிலான ஒரு குழு, சாய்பாபா உடலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள முயற்சி செய்தது. ஆனால் இந்துக்கள் அதை தடுத்து நிறுத்தினார்கள்.

அந்த சமயத்தில் ஒரு அதிசயம் நடந்தது. ஜோஷி என்ற பக்தரின் கனவில் பாபா தோன்றினார். சமாதியான பிறகு பாபா முதன் முதலில் அவர் கனவில்தான் வந்திருந்தார்.

பாபா அவரிடம், “சீக்கிரம் எழுந்திரு. பாபு சாகேப் நான் மரணம் அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே அவர் வர மாட்டார். நீ எனக்கு வழக்கமான வழிபாடுகள் செய்து காகட் ஆரத்தியை செய்” என்று உத்தரவிட்டார்.

உடனே ஜோஷி துவாரகமாயி மசூதியை சென்றடைந்தார். சிலர் அவர் பாபா உடலுக்கு ஆரத்தி காட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகளை மீறி பாபா உடலுக்கு ஜோஷி காகட் ஆரத்தி காட்டினார். பிறகு மதிய ஆரத்தியும் காட்டப்பட்டது.

இப்படி பாபா உடலுக்கு ஒருபுறம் பூஜைகள் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம், அவர் உடலை எங்கு, எப்போது, எப்படி மகா சமாதி அமைக்க வேண்டும் என்ற விவாதமும் சீரடி மக்களிடையே தொடர்ந்து நடந்தபடி இருந்தது.

பாபா கடந்த சில தினங்களாக, தன்னை கோபால்ராவ் புட்டியின் தகடிவாடாவுக்கு அழைத்து செல்லும்படியும், அங்கு தான் சுகமாக இருப்பேன் என்று கூறியதையும் மக்கள் தெரிவித்தனர்.

இந்துக்கள் அதை ஏற்றுக் கொண்டனர். தகடி வாடாவில் ஒரு பகுதியை பாபாவுக்கு தர ஏற்கனவே கோபால் ராவ் புட்டி சம்மதம் தெரிவித்து இருந்ததை இந்துக்கள் சுட்டிக் காட்டினார்கள்.

ஆனால் முஸ்லிம்கள் ஏனோ அதை விரும்பவில்லை. பாபா உடல் திறந்த வெளியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியபடி இருந்தனர்.


நடப்பதையெல்லாம் சாய்பாபாவின் பக்தர்களில் ஒருவரான காகா சாகேப் தீட்சித் பார்த்துக்கொண்டே இருந்தார். இனியும் அமைதியாக இருந்தால் பிரச்சனைவேறு வடிவம் பெற்றுவிடும் என்பதை உணர்ந்து, இதுபற்றி அகமதுநகர் மாவட்ட கலெக்டருக்கு தந்தி அடித்து தகவல் தெரிவித்தார். கலெக்டருக்கு சீரடியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் வீரியம் புரிந்தது.

உடனடியாக அவர் கோபர்கவுனில் அரசின் வருவாய் துறை உயர் அதிகாரிகளில் ஒருவரான சனே என்பவரை சீரடிக்கு அனுப்பி வைத்தார். இத்தகைய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளை ‘மம்லதர்’ என்று அழைப்பார்கள். பிரச்சனைகளை தீர்த்து வைப்பது மம்லதரின் பணியாகும்.

மம்லதர் சனே சீரடி வந்ததும், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண, ஓட்டெடுப்பு நடத்த மம்லதர் முடிவு செய்தார்.

உடனே இரு பெரிய நோட்டுகள் எடுத்து வரப்பட்டன. கோபால்ராவ் புட்டி கட்டி வரும் புதிய கட்டிடத்தில் பாபா உடலை அடக்கம் செய்ய விரும்புபவர்கள் ஒரு நோட்டிலும், எதிர்ப்பவர்கள் மற்றொரு நோட்டிலும் கையெழுத்திடுங்கள் அல்லது கைநாட்டு வையுங்கள் என்று உத்தரவிடப்பட்டது.

பாபா உடலை எங்கு அடக்கம் செய்வது என்பதோடு எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வகையில் பரபரப்பாக ஓட்டெடுப்பு நடந்தது. ராமச்சந்திர பாடீலும், அவருக்கு துணை நின்ற இளைஞர்களும் தகடி வாடாவில் பாபா உடலை அடக்கம் செய்வதற்காக மக்களிடம் பெரிய பிரசாரமே செய்துவிட்டனர்.

சீரடியைச் சேர்ந்த 2 ஆயிரத்து 233 பேர் இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்றனர். அனைவரும் கையெழுத்திட்டு முடித்ததும், கையெழுத்துக்கள் எண்ணப்பட்டன.

கோபால்ராவ் புட்டி கட்டி வந்த தகடி வாடாவில் பாபா உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று 1503 பேர் கையெழுத்திட்டிருந்தனர். வெட்ட வெளியில் சமாதி அமைக்கப்பட வேண்டும் என்று 730 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.


இதையடுத்து பாபா உடல் புட்டிவாடாவில் அடக்கம் செய்யப்படும் என்று மம்லதர் சனே அறிவித்தார்.

பாபா பல தடவை தனக்கு அரசாங்கம் தான் மாஸ்டர் என்று கூறியதுண்டு. அவர் அவ்வாறு சொல்லியதன் அர்த்தம் அன்று தான் பலருக்கும் புரிந்தது. 16-ந்தேதி (புதன்கிழமை) மாலை சாய் பாபாவின் உடலுக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பாபா தன் உயிரை துறந்த 36 மணி நேரம் கழித்து இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் ஒரு அதிசயத்தை உணர்ந்தனர்.

பொதுவாக ஒருவர் மரணம் அடைந்து விட்டால், சில மணி நேரத்துக்குள் அவரது உடல் விறைத்து விடும். அப்புறம் உடலின் எந்த உறுப்பையும் நீட்டவும் முடியாது. மடக்கவும் முடியாது.

ஆனால் பாபா உடல் தெய்வீகமாக இருந்தது. 36 மணி நேரம் கடந்தும் பஞ்சு போல அவர் உடல் மிருதுவாக இருந்தது. இதனால் அவர் அணிந்திருந்த கப்னி உடையை லாவகமாக கழற்றி எடுத்து விட்டு குளிப்பாட்டுவது பக்தர்களுக்கு மிகவும் எளிதாக இருந்தது.

குளிப்பாட்டப்பட்ட பிறகு பாபா உடலுக்கு புதிய உடை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. பிறகு உடல் துவாரகமாயி மசூதியில் இருந்து தகடி வாடாவுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். அவர்கள் நாணயங்களையும், பூக்களையும் பாபா உடல் மீது வாரி இறைத்தனர்.

தகடி வாடாவை கட்டி வந்த கோபால்ராவ் அங்கு தன்குல தெய்வமான முரளிதரர் சிலை நிறுவுவதற்காக ஒரு இடத்தை விட்டு வைத்திருந்தார். அது மூலஸ்தானமாக கருதப்பட்டது. அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு பாபாவை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சந்தனம், உதி, மலர்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை கொட்டி அந்த பள்ளத்தை பக்தர்கள் சிறப்பு செய்திருந்தனர். பாபா உடல் அதனுள் வைக்கப்பட்டது.

அந்த சமயத்திலும் பாபா உடலை படுத்த நிலையில் அடக்கம் செய்யக்கூடாது என்று ஒரு சாராரும், அமர்ந்த நிலையில் சமாதி அமைக்கக் கூடாது என்று மற்றொரு சாராரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து படுத்த நிலையில் இல்லாமலும், அமர்ந்த நிலையில் இல்லாமலும் சற்று சாய்ந்த நிலையில் பாபா உடல் வைக்கப்பட்டு சமாதி செய்யப்பட்டது. அவர் உடல் அருகே அவர் தம் உயிராக போற்றிய செங்கல், கைப்பையும் வைக்கப்பட்டது.

உபாசினி மற்றும் பாலா சாகேப் பாடே ஆகியோர் பாபாவின் நல்லடக்கத்தை செய்து முடித்தனர்.


(இவற்றையெல்லாம் நேரில் பார்த்த பேராசிரியர் நார்கே என்பவர் இந்த நிகழ்வுகளை தமது புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்)

முரளீதரர் குடியேற வேண்டிய இடத்தில் பாபா குடியேறியதன் மூலம் உண்மையில் பாபாவே முரளீதரர் ஆனார். அன்று முதல் புட்டிவாடா, ஆலயமாக மாறியது. அதையே நாம் இப்போது சமாதி மந்திர் என்று அழைக்கிறோம்.

அமைதியையும், ஆனந்தத்தையும் தேடி துவாரகமாயி மசூதிக்கு சென்ற பக்தர்கள், 17-ந்தேதி முதல் புட்டி வாடாவுக்கு திரும்பினார்கள்.

கோபால்ராவ் புட்டி கட்டிய தகடி வாடா இப்படி சமாதி மந்திராக மாறும் என்று முதலில் யாருமே எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னணியிலும் ஒரு சுவாரசியம் உள்ளது.

பாபாவின் பக்தர்களில் ஒருவரான நாக்பூரைச் சேர்ந்த கோபால் ராவ் புட்டி பெரிய கோடீசுவரர். அவருக்கு பாபா அருகில் தங்கி இருக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. துவாரகமாயிக்கும், பாபா அழகிய பூஞ்செடிகளை நட்டு வளர்த்து வந்த லெண்டி தோட்டத்துக்கும் இடையில் குருஸ்தான் அருகே இருந்த இடம் அவர் மனதுக்கு பிடித்திருந்தது. அங்கு அவர் ஒரு கட்டிடம் கட்ட விரும்பினார்.

ஆனால் பாபாவிடம் இதற்கு எப்படி அனுமதி கேட்பது என்று தயங்கினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய பாபா, “தகடி வாடா கட்டு” என்று உத்தரவிட்டார். அதேபோல் சாமா என்ற பக்தர் கனவிலும் தோன்றி, கோபால்ராவ் பூட்டியை கட்டிடம் கட்ட சொல்” என்றார்.


மறுநாள் தங்கள் இருவருக்கும் பாபா ஒரே மாதிரி கனவில் வந்து உத்தரவிட்டதை அறிந்து மெய்சிலிர்த்தனர். துவாரகமாயி அருகிலேயே கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாபா அனுமதி பெற்றே கோபால்ராவ் பூட்டி கட்டினார்.

கட்டிட உள்பகுதி எப்படி இருக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க பாபாவின் உத்தரவுபடியே நடந்தது. பாபாவே அங்கு தெய்வமாக உறையப்போகிறார் என்பதை அப்போது யாருமே துளி அளவுகூட நினைத்து பார்க்கவில்லை.

ஆனால் தகடி வாடாவில் தான். குடியேறப் போவதை பாபா அடிக்கடி தம் பக்தர்களிடம் பரிபாஷை மூலம் கூறி வந்தார். கோபால்ராவ் அந்த கட்டிடத்தை பூர்த்தி செய்யும் நிலைக்கு வந்தபோது, பாபாவும் அங்கு செல்லத்தயாரானார்.

அந்த கட்டிடத்தை பார்க்கும் போதெல்லாம், “கோவில் வேலை முடிந்ததும் நான் அங்கு வந்து தங்குவேன்” என்று பாபா கூறுவதுண்டு. அவர் சொன்னது அப்படியே பலித்தது.

“புட்டியின் வாடாவினுள் நான் நிரந்தரமாகத் தங்கி பக்தர்களைக் காப்பேன்” என்ற வாக்குறுதிபடி பாபா இன்றும் அங்கு உயிர்ப்புடன் உள்ளார்.

அதற்கு உதாரணமாக சமாதி மந்திரில் உள்ள பாபாவின் சிலையை சொல்லலாம். அந்த சிலையில் பாபா இன்றும் இரண்டற கலந்து இருக்கிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!