ஜெ. மரணம் – மாதவன் உள்பட 60 பேருக்கு சம்மன்…!


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஜெ.தீபா கணவர் மாதவன் உள்பட 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ ஆனூர் ஜெகதீசன், எம்.ஜி.ஆர்.-அம்மா-ஜெ.தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாண பத்திரம் மற்றும் புகார் மனுவை ஆணையத்துக்கு அளித்தனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இவற்றை நீதிபதி ஆறுமுகசாமி படித்து பார்த்தார். இதைதொடர்ந்து டாக்டர்.சரவணன் மற்றும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவக்கல்வி இயக்குனராக இருந்த விமலா, ஜெயலலிதா மரணம் அடைந்த போது மருத்துவக்கல்வி இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் நாராயணபாபு ஆகியோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது.

அதன் அடிப்படையில் அவர்கள் ஆணையத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். இதை நீதிபதி ஆறுமுகசாமி பதிவு செய்து கொண்டார். இந்தநிலையில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உள்பட 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் ஒவ்வொரு நாளும் ஒரு நாளைக்கு இருவரை விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

மாதவன் நாளை(6-ந் தேதி) ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி பிரமாண பத்திரம், புகார் மனுக்களை அனுப்பியவர்களிடம் விசாரணையை நடத்தி முடிக்க ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!