மொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடுவதாக சாம்சங் அறிவிப்பு..!!


சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சீனாவில் இயங்கி வரும் தனது மொபைல் போன் உற்பத்தி செய்யும் ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது.

சீனாவில் இயங்கி வரும் தியாஞ்சின் சாம்சங் எலக்டிரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் தயாரிப்பு ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக சாம்சங் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவில் வடக்கில் அமைந்திருக்கும் தியாஞ்சின் நகரத்தில் சாம்சங் மொபைல் தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் தியாஞ்சின் சாம்சங் தயாரிப்பு ஆலை மூடப்படுவதாக சாம்சங் அறிவித்துள்ளது. இந்த ஆலையில் பணியாற்றி வருவோருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய தொகை வழங்கப்படும்.

மேலும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் சாம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருவோருக்கு வேறு தயாரிப்பு ஆலைகளில் பணியமர்த்துவோம் என சாம்சங் தெரிவித்துள்ளது.

இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சாம்சங் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், சீனாவின் ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் தொடர்ந்து இயங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

சாம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் ஆண்டு முழுக்க 3.6 கோடி மொபைல் போன்களையும், ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் மொத்தம் 7.2 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்கிறது. இத்துடன் வியட்நாமில் உள்ள இரண்டு தயாரிப்பு ஆலைகளில் ஆண்டு முழுக்க 24 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!