வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக சிறிசேனா பரபரப்பு குற்றச்சாட்டு..!


இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார்.

ஆனால் சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. பின்னர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானங்களில் ராஜபக்சே தோல்வியை தழுவினார். இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. சிறிசேனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து இருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு மதிப்பீடுகளுக்கு இடையிலான மோதலே காரணம் என சிறிசேனா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டு கூறாத அவர், வெளிநாட்டு சக்திகள் தன்னை அச்சுறுத்துவதாகவும் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வெளிநாட்டு சக்திகளுக்கு இடம் கொடுக்காமலும், வெளிநாட்டு அச்சுறுத்தல்களை புறந்தள்ளியும் தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் நான் செயல்படும்போது, வெளிநாட்டு சக்திகள் ஒரு சவாலாக உருவெடுத்து அச்சுறுத்துகின்றன. பழைய ஏகாதிபத்தியத்தின் நிழல்கள் நமது வழியில் குறுக்கிடுகின்றன.

இலங்கையின் புவியியல் சார்ந்த முக்கியத்துவம் அல்லது உலக வரைபடத்தில் இலங்கையின் அமைவிடம் மீது உலக வல்லரசுகள் கொண்டிருக்கும் நாட்டமே தற்போதைய குழப்பங்களுக்கு காரணம். வெளிநாட்டு சக்திகளின் எண்ணங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும், உள்நாட்டு மதிப்பீடுகளை மதிப்பவர்களுக்கும் இடையிலான மோதல் பிரச்சினை ஆகும். இவ்வாறு சிறிசேனா கூறினார்.

முன்னதாக நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வழக்கு குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு வழங்கினாலும், தாய்நாட்டின் நலன் கருதி அதை செயல்படுத்துவேன். இதில் எந்த ஒரு தனிநபர் அல்லது கட்சியின் நலனை கருத்தில் கொள்ளமாட்டேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!