இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட தடை – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு..!


இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அந்த நாட்டில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட வழிவகுத்துவிட்டது.

ரனில் விக்ரமசிங்கே மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய அதிபர் சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ந் தேதி அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், தான் தொடர்ந்து பிரதமராக நீடிப்பதாக ரனில் விக்ரமசிங்கே கூறினார். இதனால் யார் பிரதமர் என்பதில் அரசியல் சட்டசிக்கல் எழுந்தது. நாடாளுமன்ற சபாநாயகரும், ராஜபக்சேவை பிரதமராக ஏற்க மறுத்துவிட்டார்.

ராஜபக்சேவை பிரதமராக நியமித்ததற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், நெருக்கடியில் இருந்து தப்பிக்க நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டதோடு, புதிதாக தேர்தல் நடத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மூன்று முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த வாக்கெடுப்பில் ரனில் விக்ரமசிங்கேவுக்கே ஆதரவு அதிகம் இருந்ததால், ராஜபக்சே தோல்வி அடைந்தார். என்றாலும் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.

ரனில் விக்ரமசிங்கேயை ஓரம்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறிசேனா மேற்கொண்ட நடவடிக்கைகள் அடுத்தடுத்து சிக்கல்களை ஏற்படுத்தியதோடு, அவர் மீது கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தின் காரணமாக அந்த நாட்டின் ரூபாய் மதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு பல்வேறு உலக நாடுகளும் சிறிசேனாவை வற்புறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ராஜபக்சே பிரதமராக நீடிப்பதை எதிர்த்தும், அவரது அரசுக்கு எதிராகவும் 122 எம்.பி.க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜபக்சே பிரதமராக செயல்படுவதற்கும், உத்தரவுகள் பிறப்பிப்பதற்கும் தடை விதித்து அதிரடியாக இடைக்கால உத்தரவிட்டது. மேலும் ராஜபக்சேயின் அரசும், மந்திரிகளும், துணை மந்திரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு வருகிற 12-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு சிறிசேனாவுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க் கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் வருகிற 7-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கும் என்று தெரிகிறது.

இதனால், தன்மீது மேலும் அதிருப்தி ஏற்படுவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்து பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற அதிபர் சிறிசேனா திட்டமிட்டு இருப்பதாகவும், இதுகுறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி அதிபர் சிறிசேனாவின் செய்தித் தொடர்பாளர் தர்மசிறி ஏகநாயகே கூறுகையில், நாடாளுமன்றத்தை கலைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், ஆனால் அதிபரின் திட்டம் என்ன என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!