கன்னியாகுமரி – ஒகி புயலால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…!


ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை, பளுகல், ஈத்தாமொழி பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

சாலைகள் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இன்றும் ஒகி புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே பரளியாறு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் விமல் என்கிற 27 வயது இளைஞர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஒகி புயலால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது மாயமாகி உள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

கடலிலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாத நிலை உள்ளதால் அவர்களை தேடி கண்டு பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் மழை காரணமாக அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய தாலுகா பகுதிகளில் இதுவரை 302 வீடுகள் இடிந்து உள்ளன.

இதில் 62 வீடுகள் முழுமையாகவும், 240 வீடுகள் பகுதி வாரியாகவும் இடிந்து உள்ளது. இதில் 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 16 தற்காலிக வெள்ள நிவாரண முகாம் திறக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் 417 ஆண்களும், 554 பெண்களும் 71 குழந்தைகளும் மொத்தம் 1044 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!