மீண்டும் இலங்கை பாராளுமன்றம் இன்று மாலை கூடுகிறது..!


இலங்கையில் பிரதமரக இருந்த ரணில் விக்ரமசிங் கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந்தேதி நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.

ராஜபக்சேவுக்கு பெரும் பான்மை இல்லாததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்தார். அதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனவே கடந்த வாரம் பாராளுமன்றம் கூடிய போது வரலாறு காணாத வகையில் மோதல் ஏற்பட்டது.

இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் கடந்த 14 மற்றும் 16-ந்தேதிகளில் ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. எனினும் அதை ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். ரணில் விக்ரம் சிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மறுத்து வருகிறார்.

3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிபர் சிறிசேனா கூட்டினார். அதில் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மற்றும் அவர்களது கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா கலந்து கொள்ளவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டம் எவ்வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

எனவே பிரதமர் யார் என்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் இன்று மாலை மீண்டும் கூடுகிறது. அப்போது புதிய பிரதமர் யார்? என்ற பிரச்சினை மீண்டும் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சபையில் மீண்டும் மோதல், அடி-தடி ரகளை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதற்கிடையே பாராளுமன்றத்தில் கடந்த வாரம் போன்று மோதல் தொடர அனுமதித்தால் எம்.பி.க் களில் ஒருவர் அல்லது இருவர் கொல்லப்படலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர அச்சம் தெரிவித்துள்ளார்.

ஹம்பாத்தோட்டை மாவட்டத்தில் இலங்கை சுதந்திரா கட்சியின் அமைப்பாளர்ளின் கலந்துரை யாடல் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய போது இத்தகவலை அவர் கூறினார். இதற்கிடையே நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த லட்சுமன் கிரியெல்ல நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது “எங்கள் தரப்புக்கு (ரணில் விக்ரம சிங்கேவுக்கு) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க அதிபருக்கு மக்கள் உத்தரவு வழங்கவில்லை. புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.-source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!