‘ஓகி’ புயலாக கன்னியாகுமரியை நோக்கி வருகிறது காற்றழுத்தம்…!


காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பகல் 11 மணி வரையிலும், தென்மாவட்டங்களில் பகல் 12 மணி வரையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர புயலாக மாறி கன்னியாகுமரியை நோக்கி நெருங்கி வருகிறது.

தற்போது170 கி.மீ. தொலைவில் குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் 20 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி மெதுவாக நகர்ந்து வரும்.

புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்தன.

நாகர்கோவிலில் மின்சார டிரான்ஸ்பார்மரும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் சேதமடைந்தது.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் விட்டு விட்டு கனமழையும் பெய்து வருகிறது.

கனமழை எதிரொலியால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வெளுத்து வாங்குகிறது. இருந்தாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க வந்த ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரம் படிகளில் வெள்ள நீர் வடிந்து ஓடுவதில் பலரும் குளித்து மகிழ்ந்தனர்.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!